SuperTopAds

யாழ்ப்பாண கோட்டையை மீட்டெடுத்த தனது இராணுவ அனுபவத்தை இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் பகிர்ந்தார் ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாண கோட்டையை மீட்டெடுத்த தனது இராணுவ அனுபவத்தை இந்திய வெளியுறவுத்துறை செயலருடன் பகிர்ந்தார் ஜனாதிபதி..!

இந்தியாவை அச்சுறுத்துவதற்கான தளமாக இலங்கையை பாவிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டேன். என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஸ கூறியுள்ளார். 

இந்திய வெளிவிவகார செயலாளருடனான சந்திப்பு குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களும், இரண்டு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் 

என்பதனை -இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் நான் இன்று வலியுறுத்தினேன். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் 

என்பதனையும் நான் அவரிடம் எடுத்துரைத்தேன். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவற்றை அவரிடம் நான் குறிப்பிட்டேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில், 

1960, 70ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட நட்புணர்வு மற்றும் தொடர்புகளை மீளக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றியும் நான் தெளிவுபடுத்தினேன்.1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என்று, 

அப்போதைய எமது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்வைத்த யோசனையை செயற்படுத்துவதற்கான பலத்தை நாம் மேலும் அதிகரித்துக்கொள்ள - இந்தியாவின் உதவியை நாம் எதிர்பார்ப்பதனையும் அவரிடம் நான் தெரிவித்தேன். 

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின் -குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டும் என்பது, 

எம் இருவரதும் கருத்தாக அமைந்திருந்தது. தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக அடையாளம் காண்பதுடன், மீனவச் சமுதாயத்துக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, 

இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் நான் எடுத்துரைத்தேன். இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பிலும் நான் கருத்துத் தெரிவித்ததுடன்,

அவற்றுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினேன். யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட எனது அனுபவத்தை நான் எடுத்துக்கூறியதுடன் காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் 

உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி எனக்கு நல்ல புரிதல் உள்ளதனையும் நான் எடுத்துரைத்தேன். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் 

கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் நான் எடுத்துரைத்தேன். இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனது எதிர்பார்ப்பு என்பதையும் நான் தெரிவித்ததுடன்,

அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது உரையாற்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் 

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பினை நான் விடுத்ததனையும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவுக்கு நான் நினைவூட்டினேன். வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காக எனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் 

நான் தெளிவுபடுத்தியதுடன் - யுத்த காலத்தின்போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 வீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதனையும் அவரிடம் விளக்கினேன்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனை நான் தெரிவித்ததுடன்,யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான 

தேவை உள்ளமை தொடர்பிலும் தெளிவுபடுத்தினேன். இரண்டு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு எனக்கு இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் 

எவரும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள நான் இடமளிக்கப் போவதில்லை என்பதனையும் நான் அவரிடம் உறுதியளித்தேன். சீனாவுடனான எமது நாட்டின் தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக நான் எடுத்துரைத்ததுடன்,

அந்த விடயம் தொடர்பாக எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் நான் விளக்கினேன். இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன;

அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுப்பதனையும் நான் இன்று தெரிவித்தேன். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு 

அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதனையும் நான் தெரிவித்தேன். இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலும், இதன்போது நாம் இருவரும் விரிவாகக் கலந்துரையாடினோம்.

இலங்கையின் முப்படையினருக்கு, இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகளை விரிவாக்குவது தொடர்பிலும், இதன்போது நாம் ஆராய்ந்தோம். மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு இரண்டு நாடுகளுக்கு இடையிலும் 

மின்சாரக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தினோம். கொவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் 

கொவிட் கட்டுப்பாட்டுக்கு இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் என்னிடம் மகிழ்ச்சி தெரிவித்தார். நீண்ட நேரமாக நான் வழங்கிய தெளிவுபடுத்தல்களுக்குத் தனது நன்றிகளையும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்ட 

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்கள் சமநிலையிலும், புரிந்துணர்வுடனும் இருப்பதால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வைத் தொடர்ந்தும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும் 

என்ற நம்பிக்கையையும் என்னிடம் தெரிவித்தார். இந்தியப் பிரதமரை இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஊடாக நான் அழைப்பை விடுத்தேன்.