மொடர்னா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதய அழற்சி பாதிப்பு!!
கனடாவில் பைஸர் கொவிட் 19 தடுப்பூசி போட்டவர்களுடன் ஒப்பிடுகையில் மொடர்னா தடுப்பூசி போட்டவர்களே அரிதான இதய அழற்சி பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்களையே இந்த இதய அழற்சி தாக்குவதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் ஒப்பீட்டளவில் லேசான நோயறிகுறிகளை அனுபவித்து விரைவில் குணமடைந்துள்ளனர் எனவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து இதய அழற்சி உள்ளிட்ட இதய நோய்களின் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் அரிதான இவ்வாறான ஆபத்துக்களை விட கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.