பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கான் மாறக்கூடாது!! -தலிபான்களை எச்சரிக்கும் ரஷ்ய-
ஆப்கானிஸ்தான் எதிர்காலத்தில் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றமடையக் கூடாது என்று தெரிவித்துள்ள ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ் எத்தகைய பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதை ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து சமாளிக்கும் என்றார்.
தலைநகர் டெல்லியில் ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆப்கான் நிலவரம் கவலை அளிக்கிறது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு பயங்கரவாதத்தை பரப்ப உதவும் நாடாக ஆப்கான் மாறக்கூடாது.
இதில் இந்தியா, ரஷ்யா இடையே ஒருமித்த கருத்து உள்ளது. எத்தகைய பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதை ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து சமாளிக்கும்.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன. தெற்காசியாவில் நிலைத்தன்மை ஏற்படுவதற்கு ஆப்கனில் நிலைத்தன்மை இருப்பது முக்கியமானது என தெரிவித்தார்.