SuperTopAds

விரைவில் ஆப்கானிஸ்தான் திரும்புவேன்!! -துபாயில் இருந்து அஷ்ரப் கனி-

ஆசிரியர் - Editor II
விரைவில் ஆப்கானிஸ்தான் திரும்புவேன்!! -துபாயில் இருந்து அஷ்ரப் கனி-

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி 4 கார்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தி முழுவதும் பணத்துடன் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து உள்ளார். 

20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசமானது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்த நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்றதாக ரஷிய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்து இருந்தது.

ஆனால் அஷ்ரப் கனி  ஒரு வீடியோ செய்தியில் தனது மவுனத்தைக் கலைத்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அவர் வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு  உள்ளார்.

துபாயில் இருந்து முகப்புத்தகத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியில்:- அவர் பேரழிவுகளைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சில் இருப்பதாகவும், நாடு திரும்ப பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும் காபூலில் தங்கியிருந்தால் பெரிய வன்முறையை  சந்திக்க வேண்டியதிருக்கும். தலீபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு நன்றி.

தலீபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை. இது எங்கள் தோல்வி.

தலீபானுக்கு அதிகாரத்தை அமைதியாக மாற்ற விரும்பினேன் ஆனால் எனது விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என கூறினார்.

நான்கு கார்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தி முழுவதும் பணத்துடன் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து உள்ளார். 

நான் பணம் கொண்டுவந்ததாக கூறப்படும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அவை பொய் நாட்டின் தலைவராக எனக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறினார்.