SuperTopAds

யாழ்.பல்கலைகழக ஊழியர்கள் தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு முறைப்பாடு! அபாயத்தின் மத்தியில் கட்டாயப்படுத்தி பணிக்கு அழைக்கிறார்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக ஊழியர்கள் தேசிய கொவிட் தடுப்பு செயலணிக்கு முறைப்பாடு! அபாயத்தின் மத்தியில் கட்டாயப்படுத்தி பணிக்கு அழைக்கிறார்கள்..

யாழ்.பல்கலைகழக ஊழியர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், பல பணியாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையிலும் பல்கலைகழக பீடாதிபதிகள் அசமந்தமாக நடப்பதாகவும், ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு அழைப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விடயம் தொடர்பாக தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் முறைப்பாடு வழங்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து விஞ்ஞானபீட ஊழியர்கள் சிலர் மேலும் தகவல் தருகையில், 

பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2/2021 (IV) இலக்க சுற்றுநிருபத்துக்கமைவாக அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ள போதிலும், 

ஒரு சில துறைத் தலைவர்களும், பீடாதிபதிகளும் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது குறித்து இராணுவத் தளபதி தலைமையிலான தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 பல்கலைக்கழகப் பணியாளர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ள நிலையிலும் எது வித பொறுப்புமற்ற நிலையில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த துறைத்தலைவர்கள் தமது திணைக்களப் பணியாளர்களைக் கட்டாயப்படுத்தி பணிக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர் எனவும், 

கொரோனா தொற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் அலுவலகங்களைத் தொற்று நீக்குவதற்கும், அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும், 

பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2/2021 (IV) இலக்க சுற்றுநிருபத்துக்கமைவாக அலுவலக நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அந்தச் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை 

உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளக சுற்று நிருபத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளபோதிலும் துறைத்தலைவர்கள் சிலர் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றனர் என்றும் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஊழியர்களால் தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 

ஊடகங்களுக்கும் சுட்டிக்காட்டியுள்ளனர்.