SuperTopAds

சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா

ஆசிரியர் - Admin
சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா

டயகம சிறுமி மரணம்: வழக்கின் சாரம்சம்

மண்ணெண்ணெய் போத்தல் நடந்து சென்றது எப்படி?

11 நிமிடங்களில் சென்றிருக்கலாம் 2 மணிநேரம் தாமதித்து ஏன்?

சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா

மண்ணெண்ணெய்யில் மாமி- சாரதியின் வாக்குமூலங்கள் முரணானது

சிறுமியின் சகோதரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தவர் யார்?

 வீட்டுப் பணிப்பெண்ணாக சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், எரிகாயங்களுடன் மரணமடைந்த தலவாக்கலை- டகயமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி தொடர்பிலான வழக்கு, நேற்று (26) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, இந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டார்.

வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது பிரதி சொலிஸிட்ட ஜெனரலினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தையும் மேலதிக நீதவானின் கட்டளைகள் மற்றும் உத்தரவுகளை, சுருக்கி சராம்சத்தை மட்டுமே இங்கு தருகின்றோம்.

பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு அச்சிறுமி, ரிஷாட்டின் அறிவுறுத்தலுக்கு அமையவே சேர்த்துகொள்ளப்பட்டுள்ளார். ஆகையால், அவரையும் (ரிஷாட்டை) சந்தேக நபராக பெயர் குறிப்பிட்டுள்ளேன்.

மற்றுமொரு சம்பவம் தொடர்பில் ரிஷாட், தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். ஆகையால், அந்த விசாரணையின் நி​றைவில், இந்த வழக்குக்காக, நீதிமன்றத்தில் ரிஷாட்டை ஆஜர்படுத்துவோம்.

சிறுமியின் சடலத்தை மீளவும் தோண்டியெடுத்து, சிரேஷ்ட நீதிமன்ற வைத்திய அதிகாரி தலைமையிலான குழு முன்னிலையில், மீண்டும் மரண பரிசோதனை செய்ய, சுகாதார பணிப்பாளர் நாயகத்துக்கு மேலதிக நீதவான் கட்டளை.

ஜூலை 3ஆம் திகதி மாலை 6.45க்கு தீப்பற்றிக்கொண்டது எனினும், இரவு 8.30க்கே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இரண்டு மணிநேரம் சிகிச்சையளிக்காமை சந்தேகம்.

அமைச்சரின் வீட்டில் பொலிஸ் சீருடையில் இருந்தவர், சிறுமியின் சகோதரருக்கு அழைப்பை எடுத்து, “ இந்த விவகாரத்தை இலகுவில் முடித்துகொள்வோம்” எனக் கூறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரிஷாட்டின் மாமாவே அச்சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். பெயர், வயது உள்ளிட்ட சகல விபரங்களையும் போலியாக கொடுத்துள்ளமை பெரும் சந்தேகம்.

மண்ணெண்ணெய் போன்ற திரவியம் அடங்கிய ப்ளாஸ்டிக் போத்தல் ஒன்றும். தலையணைக்கு கீழிருந்து ​மஞ்சள் நிற லைட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் பணியாற்றியவர்களின் வாக்குமூலங்களில் பிரகாரம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்ணெண்ணை, லைட்டர் அந்த வீட்டில் பயன்படுத்தவில்லை, தீ அவசியமாயின் சமையலறைக்குச் சென்று கேஸ் அடுப்பிலே​யே பற்றவைப்பதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பணியாற்றிய சாரதியே இன்றைக்கு ஒன்றைரை வருடங்களுக்கு முன்னர், மண்ணெண்​​ணெய் கொண்டுவந்தார் என அமைச்சரின் மாமி கூறியுள்ளார்.

ஆனால், தான் அப்படி எதனையும் வாங்கி வரவில்லையென சாரதி வாக்குமூலமளித்துள்ளார்.

அம்புலன்ஸ் வரும் வரையிலும் வீட்டின் முன்பாக உள்ள நீர்த்தொட்டியில் இரண்டு மணிநேரம் சிறுமியை அமிழ்த்தி வைத்திருந்துள்ளனர். அமைச்சரின் வீட்டில் வாகனம் இல்லையா?

வீட்டிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 11 நிமிடங்களில் பயணிக்கலாம். 2 மணிநேரம் தாமதித்தது ஏன்?

பௌத்தலோக்க மாவத்தையில் ரிஷாட் பதியுதீனுக்கு இரண்டு வீடுகள் உள்ளன, சாரதிகள் இருவரும் அந்நேரத்தில் இருந்துள்ளனர். வாகனங்கள் இரண்டும் வீட்டில் இருந்துள்ளன. அப்படியாயின் 2 மணி​​நேரம் தாமதித்த ஏன்?

சிறுமியின் பெயரை இஷனி என்ற சிங்கள பெயராகவும் வயதை 18 ஆகவும் மாற்றி கொடுத்துள்ளமை ஏன்?

வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தும் சிறுமியை பார்க்கமுடியவில்லை, ரிஷாட்டின் வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கு, பொலிஸ் சீருடையில் இருந்த ஒருவர், “பொலிஸூக்கு ​போகவேண்டியதில்லை, இவ்விடத்திலேயே முடித்துகொள்வோம்” சிறுமியின் சகோதரனிடம் ​தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் செயலாளர் எனக் கூறப்படுபவர், மலர்சாலையில் வேலைச் செய்பவர் என தன்னை அறிமுகப்படுத்தி, சிறுமியின் சகோதரனிடம் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

தன்னுடைய தங்கை எரியுண்டதாகக் கூறப்படும் அந்த அறையை சகோதரன் பார்த்தபோது, மண்ணெண்ணெய் போத்தல் கதவுக்கு அருகில் இருந்துள்ளது. பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போகும் போது, கட்டிலின் மேல் அந்தப் போத்தல் இருந்துள்ளது. “சொக்கோ” அதிகாரிகள் (பொலிஸ் தடயவியல் அதிகாரிகள்) செல்கையில், அதே போத்தல் நாற்காலியின் மேல் இருந்துள்ளது.

நான்காவது சந்தேகநபரான ரிஷாட்டின் மாமனார், அவ்வீட்டில் பணியாற்றிய இரண்டு பணிப்பெண்களை வன்புணர்ந்துள்ளார்.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், சாட்சிகளை அச்சுறுத்த கூடும் என்ற காரணத்தினால், அவர்களுக்கு பிணை வழங்கவேண்டாமென பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அந்த வீட்டிலுள்ள 8 சி.சி.ரி.வி கமெராக்களில் ஏப்ரல் மாதம் முதல் பதிவுகளை பெறுவதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.