SuperTopAds

2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 வருடங்களாக தேடி பிடித்த தந்தை!! -5 இலட்சம் கிலோ மீற்றர் பயணம் செய்ய பிச்சையெடுத்த சோகம்-

ஆசிரியர் - Editor II
2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 வருடங்களாக தேடி பிடித்த தந்தை!! -5 இலட்சம் கிலோ மீற்றர் பயணம் செய்ய பிச்சையெடுத்த சோகம்-

சீனா நாட்டின்; ஒருவர் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடங்களாக தேடி இறுதியில் அவனுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

1997 ஆம் ஆண்டு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் இருவர் அவனை கடத்தி சென்றுள்ளனர். 

பொலிஸார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்த போதும் குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தனது மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடினார்.

கையில் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போன நிலையில் தனது பயணத்தை தொடர்வதற்காக அவர் பிச்சை எடுத்தார். இந்த பயணத்தின் போது பலமுறை விபத்துக்குள்ளாகி அவரது எலும்புகள் முறிந்தன. வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி பணம் உள்ளிட்டவற்றை இழந்துள்ளார்.

இருப்பினும் அவர் தனது தேடலை நிறுத்தவில்லை. தனது மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 இலட்சம் கி.மீ. பயணம் செய்தார்.

அவரின் இந்த அயராத முயற்சிக்கு 24 ஆண்டுகளுக்கு பின் தற்போது பலன் கிடைத்துள்ளது. 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை அவர் கண்டுபிடித்து அவனுடன் இணைந்துள்ளார்.