226 செம்மறி ஆடுகளை பட்டினி போட்டு கொலை!! -பண்ணையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு-
நியூசிலாந்து நாட்டில் உள்ள விவசாயி ஒருவர் தான் வளர்த்த 226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கருணைக்கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது.
பெவன் ஸ்கொட் என்ற குறித்த விவசாயிக்கு எதிராகக் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கு தொடரப்பட்டது. அவர் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், பண்ணை வளர்ப்புக்கு போதிய உதவிகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
எனினும் விலங்குகளைத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு 9 மாதகால வீட்டுக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் 150 மணி நேரக் கட்டாய சமூக சேவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், 5 வருடங்களுக்கு விலங்குகளை அணுகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.