உலக நாடுகள் முழுவதும் ஆபத்தான் கட்டத்தில்!! -எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்-
கொரோனா வைரசில் இருந்து உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கொரோனா வைரஸ் போல உருமாற்றம் அடைந்து வரும் நோய்க்கிருமிகளால், உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும் டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.