எம்மை ஒடுக்க நினைப்பவர்களின் தலையை சீனா பெருஞ்சுவரில் அடித்து நெருக்குவோம்!! -ஜி ஜின்பிங் எச்சரிக்கை-
சீனா ஒருபோதும் பிற நாடுகளை ஒடுக்கவில்லை. இருப்பினும் எவரேனும் சீனாவை ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் கூடியிருந்த சுமார் 70 ஆயிரம் பேர் முன்னிலையில் பேசும்போதே ஜி ஜின்பிங் மேற்கண்டவாறு எச்சரிக்கை செய்துள்ளார்.
எமது நாட்டு ஆயுதப் படைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும். நமது தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான அதிக திறன் மற்றும் நம்பகமான வழிமுறைகள் எம்மிடம் உள்ளன.
எந்தவொரு வெளிநாட்டு சக்திகளும் எங்களை கொடுமைப்படுத்தவோ, ஒடுக்கவோ, அடிபணிய வைக்கவோ சீனா மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் ஜி ஜின்பிங் கூறினார்.
பிற கலாச்சாரங்கள், பிற சாதனைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள சீனா ஆர்வமாக உள்ளது. உலகின் பயனுள்ள பரிந்துரைகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்கிறோம். ஆனால் சீனர்களை ஒடுக்கும் வகையிலான உலகின் பிரச்சாரங்களை சீனா ஒருபோதும் ஏற்காது எனவும் அவர் தெரிவித்தார்.