கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் திருப்தியில்லை! பாதகமான முடிவுகளே வரும் என்கிறது மருத்துவ அதிகாரிகள் சங்கம்..
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லை. என சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன,
தற்போது மக்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் பயணத்தடை ஊடாக நாம் எதிர்பார்க்கும் இறுதி முடிவுகள் பாதகமான தாக்கத்தை உண்டாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் நாளாந்தம் அறிவிக்கப்படும் மரணங்களின் எண்ணிக்கைக்கும்
அவை உண்மையில் இடம்பெற்ற காலத்திற்கும் இடையில் சுமார் 3 வாரங்கள் அல்லது ஒரு மாத இடைவெளி காணப்படுகிறது. மே மாதம் இடம்பெற்ற மரணங்களே தற்போது அறிவிக்கப்படுகின்றன.
எனவே கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கக் கூடியவையாக இல்லை என்பதை இலங்கை மருத்துவ சங்கம் என்ற அடிப்படையில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காரணம் தற்போது மக்கள் செயற்படும் விதம் போக்குவரத்து கட்டுப்பாடுகளின் ஊடாக நாம் எதிர்பார்க்கும் இறுதி முடிவுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள போதிலும்
பெருமளவான வாகனங்கள் வீதிகளில் செல்கின்றன. மக்கள் சாதாரணமாக நடமாடும் சூழலை அவதானக்கக் கூடியதாகவுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகளின் போது, இயன்றவரை
அதன் விதிகளுக்கு மதிப்பளித்து சகலரும் செயற்பட வேண்டும்.அத்தோடு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரித்தல் ,
தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களை சமூகத்திலிருந்து வேறுபடுத்தல் மற்றும் தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குதல் என்பவற்றிலும் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
14 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்துவதா அல்லது தொடர்ந்தும் நீடிப்பதா என்பதை தற்போது யாராலும் தீர்மானிக்க முடியாது. இன்று நாட்டில் காணப்படும் நிலைமையை அவதானிக்கும் போது,
வைத்தியசாலைகளில் பெருமளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூகத்திலிருந்து பெருமளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
எனவே 7 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு எடுத்த தீர்மானம் மிக முக்கியத்துவமுடையதும் , காலத்திற்கு ஏற்றதுமாகும். எனினும் 14 ஆம் திகதியும் பொருத்தமான
தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றார்.