SuperTopAds

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாட்டை பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கு விளக்கிய ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
ஜெனீவா தீர்மானம் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாட்டை பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கு விளக்கிய ஜனாதிபதி..!

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை பிரிட்டன் உயர்ஸ்த்தானிகர் ஸ்ரீமதி சார ஹல்டனுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிரிட்டன் உயர்ஸ்த்தானிகர் மற்றும் குழுவினருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். 

குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வழங்கியுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்படி விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

ஜெனிவா முன்மொழிவு தொடர்பான இலங்கையின் நிலைப்பாடை பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். 

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு  அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர்,

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்குத் தாம் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றியும் கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு 

அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் ஆராய்ந்தார்.

2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற 

வேலைத்திட்டங்களுக்கு அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும்,சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், 

சாரா ஹல்டன் இன்று இணக்கம் தெரிவித்தார். சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை 

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 20.8 வீத “வன ஒதுக்கீட்டை” 30 வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் ஆராய்ந்தார்.

“எக்ஸ் – பிரஸ் பேர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு அவரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். 

ஜெனிவா முன்மொழிவு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் ஜனாதிபதி அவருக்கு இன்று தெளிவுபடுத்தியதுடன்,

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பற்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew Price), எனது பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, 

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.