முல்லைத்தீவில் காணாமல் போனோர் பணியகத்தின் உப அலுவலகம்:- மங்கள உறுதி

காணாமல் போனோர் பணியகத்தின் உப அலுவகம் ஒன்று முல்லைத் தீவு மாவட்டச் செயலகத்தில் நிறுவப்படும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முல்லைத்தீவில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் உறுதியளித்தார்.
காணாமல் போனோர் பணியகத்தின் உப அலுவகம் ஒன்று முல்லைத் தீவு மாவட்டச் செயலகத்தில் நிறுவப்படும். அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முல்லைத்தீவில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் உறுதியளித்தார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டு அங்கிருந்து புறப்படும்போது போராட்டக்காரர்களைக் கண்டு, தானாக அவர்களிடம் சென்று கலந்துரையாடினார். அவர்களின் போராட்டம் தொடர்பில் கேட்டறிந்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் அமைச்சர், “காணாமற் போனோர் பற்றிய விடயங்களைக் கையாழும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் அவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும். அதன் ஊடாக உங்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும்” என்றார்.
எனினும், மங்களவின் கருத்தை ஏற்கமறுத்த உறவுகள் எமக்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நியமிக்கப்பட பணியகத்தில் நம்பிக்கை இல்லை. நீண்டகாலமாக எம்மை தவிக்கவிட்டுள்ளனர். நாம் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்” என்று அமைச்சரிடம் கூறினார்.
இதனைக் கேட்ட அமைச்சர் “காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் கொழும்பில் இருப்பதால் உங்களுக்கு அச்சநிலை இருக்கலாம். நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது இதில் அதிக கரிசனை கொண்டிருந்தவன் என்ற அடிப்படையில் இந்த பணியகத்தின் உப அலுவலகம் ஒன்றை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நிறுவ தேவையான நடவடிக்கை எடுக்கின்றேன். உங்கள் மாவட்டத்தில் இந்தப் பணியகம் நிறுவப்பட்டால் நீங்கள் எவ்வித தயக்கமும் இன்றி சுதந்திரமாகப் பிரச்சினைகளைக் கூறித் தீர்வைப் பெற முடியும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பணியகம் உங்களுக்காக வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும்” என்றார் .