இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம்!! -ஹமாஸ் அறிவிப்பு-
இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஹமாஸ் அறிவித்து உள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியது.
இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இத்தாக்குதலில் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 263 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடள் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த ஒப்பந்தம் வெள்ளி கிழமை அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது. ஆனால், நேரம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.