SuperTopAds

மக்களுக்கு தேவையான கொவிட் 19 தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவாருங்கள்..! உயர்மட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்பு..

ஆசிரியர் - Editor I
மக்களுக்கு தேவையான கொவிட் 19 தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டுவாருங்கள்..! உயர்மட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்பு..

கொவிட் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் நாட்டுக்கு கொண்டுவருதலை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். குறுகிய காலத்திற்குள், முடியுமான அளவு தடுப்பூசிகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கொவிட் தடுப்பு பணி குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நோய் பரவுவதற்கு அதிகளவு வாய்ப்புள்ள மேல் மாகாணம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். ரஷ்ய நாட்டின் உற்பத்தியான ஸ்புட்னிக் (Sputnik) தடுப்பூசியை வழங்கும் பணிகள் நேற்று (06) முதல் ஆரம்பமானது. சீனாவிலிருந்து கிடைக்கப்பெற்ற 6 இலட்சம் “சைனோபாம்” தடுப்பூசிகள் 

சுகாதார அமைச்சிடம் உள்ளன. 51 நாடுகளில் 55 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு “சைனோபாம்” தடுப்பூசிகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி அந்த தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கு உள்ள வாய்ப்புகளை கண்டறியுமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு “அஸ்ட்ரா செனிக்கா” தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. “அஸ்ட்ரா செனிக்கா” தடுப்பூசிகள் மேலதிகமாக உள்ள நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான கலந்துரையாடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களை தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தல் மூலம் நோய் பரவுவதை தடுப்பதற்கு அதிகபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதனை அதிகாரிகள் இன்று சுட்டிக்காட்டினர். அனைத்து வைத்தியசாலைகளின் வசதிகளையும் தேவையான அளவில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோய் பரவுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்பதனை அதிகாரிகள் வலியுறுத்தினர்.