SuperTopAds

இந்தியாவில் பரவிவரும் திரிபடைந்த கொவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவுகிறதா? உறுதியான ஆதாரம் எதுவும் ஆய்வில் கிடைக்கவில்லையாம்...

ஆசிரியர் - Editor I
இந்தியாவில் பரவிவரும் திரிபடைந்த கொவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவுகிறதா? உறுதியான ஆதாரம் எதுவும் ஆய்வில் கிடைக்கவில்லையாம்...

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் திரிபுபட்ட கொரோனா வைரஸ் இலங்கையில் பரவியுள்ளதா? என்பதை ஆராய்கிறோம். ஆனால் இதுவரை எந்தவொரு ஆதாங்களும் கிடைக்கவில்லை. என கூறியிருக்கும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்திர, 

உறுதியான ஆய்வு முடிவுகள் வெளியாகாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் ஆக குறைந்தது 2 மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது கட்டாயம். எனவும் அடுத்தவாரம் ஆய்வின் முடிவுகள் பூரணமாக கிடைத்ததன் பின்பே மேலதிகமான விடயங்களை வெளிப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ள அவர் மக்கள் பொறுப்புடன் நடக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் பரவல் அடைந்துவரும் கொரோனா வைரஸின் மாறுபாடு இலங்கையில் பரவி வருகின்றது என்பதற்கு இதுவரை எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை. இந்தப் புதிய வைரஸ் குறித்த முழு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின் அடுத்த வாரம் சரியாகக் கூற முடியும்.

இந்தியாவில் பரவல் அடைந்துவரும் வைரஸ் இலங்கைக்குள் பரவ வாய்ப்புள்ள போதிலும் இதற்கான சாத்தியக் கூறுகளை குறைக்க சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். இதேநேரம் இந்த வைரஸ் நாட்டில் ஏற்கனவே பரவி வரும் வைரஸின் புதிய மாறுபாடாக கூட இருக்கலாம் என பரிசோதனைகள் காட்டுகின்றன.

பண்டிகைக் காலத்துக்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கொரோனாத் தொற்று மாதிரிகளில் இது போன்ற பிறழ்வை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் புதிய வைரஸ் நாட்டில் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் என்றார்.