இலங்கையில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸே பரவுகிறது..! பேராசிரியர் நீலிகா மலவிகே அதிர்ச்சி தகவல்..
இலங்கையில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் உருமாறிய புதியவகை கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
என சுட்டிக்காட்டியிருக்கும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப்பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே கூறியுள்ளார்.
இது முன்னர் காணப்பட்ட வைரஸிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையது என்பதோடு கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.
கொவிட் பரவல் தொடர்பான நேற்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இந்தியாவில் சிறந்த நிலைமை காணப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 11 000 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர்.
அந்நாட்டு சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவான எண்ணிக்கையாகும். எனினும் கிரிக்கட் விளையாட்டு போட்டி , தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றால் அங்கு மீண்டும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோது இலங்கையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் துரதிஷ்டவசமாக உருமாறிய புதிய வைரசுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த புதிய வைரஸ் முன்னர் காணப்பட்ட வைரஸின் தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
முன்னர் காணப்பட்ட வைரஸ் ஒருவரிடமிருந்து ஏனைய ஒருவர் அல்லது இருவருக்கு மாத்திரமே பரவக் கூடியதாக காணப்பட்டது. ஆனால் தற்போதுள்ள வைரஸ் ஒருவரிடமிருந்து 5 - 6 பேருக்கு பரவக் கூடியதாகும்.
அத்தோடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 90 சதவீதமானோருக்கு 14 நாட்களுக்கு எவ்வித தொற்று அறிகுறிகளும் தென்படாது.
மேலும் தற்போது இளைஞர்களும் அதிகளவாக தொற்றுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் கணிசமானளவு இளைஞர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள்
முகக்கவசம் அணியாமல் இருப்பாராயின் அவர் இருக்குமிடத்தில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வைரஸ் உயிருடன் இருக்கும்.
எனவே தொற்றுக்கு உள்ளானவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியேறினாலும் அவரிடமுள்ள வைரஸ் அங்கு காணப்படும்.
இதனால் ஏனையோரும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே சரியான முறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்றார்.