16 வயது கறுப்பின சிறுமியை சுட்டுக் கொன்ற அமெரிக்க பொலிஸ்!! -ஜார்ஜ் பிளாய்ட் வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் சம்பவம்-
அமெரிக்காவின் மினியாப்பொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்கிற கறுப்பினத்தவரை கழுத்து நெரித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அரை மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் 16 வயது கறுப்பின சிறுமி ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக பொலிஸாருக்க தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த மாகியா பிரையன்ட் என்கிற 16 வயது கருப்பின சிறுமி கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கறுப்பின சிறுமியை பொலிஸார் ஏன் சுட்டு கொன்றனர் என்கிற உண்மை வெளிவரவில்லை. விரிவான விசாரணைக்கு பின் உண்மை என்ன என்பது தெரியவரும் என கொலம்பஸ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மே மாதம் மினசோட்டா மாகாணம் மினியாப்பொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்கிற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி டெரெக் சாவின் கால் முட்டியை வைத்து அழுத்தி கொன்ற வழக்கில் டெரெக் சாவினை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அரை மணி நேரத்திற்குள் குறித்த கருப்பின சிறுமி பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருப்பின சிறுமியை பொலிஸார் சுட்டுக் கொன்றதை கண்டித்து கொலம்பஸ் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. அந்த நகரில் உள்ள பொலிஸ் தலைமையகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.