SuperTopAds

மியான்மாரில் வேட்டை துப்பாக்கிகளை ஏந்தி போராட்டம்!! -பழங்குடியினர் மீது இராணுவம் கடும் தாக்குதல்-

ஆசிரியர் - Editor II
மியான்மாரில் வேட்டை துப்பாக்கிகளை ஏந்தி போராட்டம்!! -பழங்குடியினர் மீது இராணுவம் கடும் தாக்குதல்-

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக வேட்டை துப்பாக்கிகளைக் கொண்டு சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட காலே நகர் மீது இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது.

இதில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:-

மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதத்தில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இராணுவத்துக்கு எதிராக காலே நகரில் சில போராட்டக்காரர்கள் வீடுகளில் தயாரிக்கப்பட்ட வேட்டைத் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

அதையடுத்து, அந்த நகரில் இராணுவம் நேற்று புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட விடியோக்களில், சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் சுடப்படும் ஒலியும் கையெறி குண்டுகள் வெடிக்கும் சப்தமும் பதிவாகியுள்ளன.

சில இடங்களில் ராக்கெட் குண்டுகளை வீசி இராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் சமூக வலைதளப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டன. எனினும், இதற்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை.

இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாக ‘கோனும்துங் பர்மீஸ்’ என்ற இணையதள செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

மேலும், இதில் ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

அந்த நகரில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் நiபெற்றுவரும் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இதுவரை 581 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.