மியான்மரிலிருந்து உடனடியாக குடும்பத்துடன் நாடு திரும்புங்கள்!! -அரச ஊழியர்களுக்கு அமெரிக்கா உத்தரவு-
மியான்மரில் பணியாற்றிவரும் அமெரிக்க அரசு ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மரில் இராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மக்களின் இந்த போராட்டம் இராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டுகின்றது.
அடக்குமுறைகளைத் தாண்டியும் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 500ற்கும் மேற்பட்ட மக்கள் அந்நாட்டு இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மர் இராணுவத்தின் மிருகத்தனமான செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் வன்மையாக கண்டித்து வருகின்றன.
மியான்மர் நாட்டுக்கு அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மியான்மரில் பணியாற்றும் அமெரிக்க அரச ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினருடன் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.