23 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க ஆட்களை அனுப்பிவிட்டு கொள்ளை நடத்துவிட்டதாக பொலிஸாருக்கு நாடகமாகடிய பிரபல நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் கைது..!
தான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து 23 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிப்பதற்கு ஆட்களை அனுப்பியதுடன், கொள்ளை நடந்து முடிந்தவுடன் கொள்ளை நடந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நாடகமாகடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமை முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய குறித்த நபர் இவ்வாறு திட்டமிட்டு நிறுவன பணத்தை கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மீகாவத்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை ஈயந்துட்டுவ பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றின்
23 இலட்சம் பணம் மற்றும் 84 000 ரூபா பெறுமதியுடைய காசோலை என்பவற்றை வங்கியில் வைப்புச் செய்வதற்காக கொண்டு சென்ற போது வங்கிக்கு அருகில் மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டினை அந்நிறுவனத்தின் முகாமையாளர் செய்துள்ளார். இது தொடர்பில் மீகாவத்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சம்பவம் முறைப்பாடளித்த முகாமையாளரினால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்த பையில் 50 000 ரூபா பணம் மாத்திரமே காணப்பட்டுள்ளது. குறித்த நபர் வெவ்வேறு தேவைகளுக்காக அவர் தொழில்புரிந்த நிறுவனத்தின் பணத்தை செலவிட்டமையினால் அவற்றை மீள செலுத்துவதற்காக இவ்வாறானதொரு கொள்ளையை திட்டமிட்டுள்ளமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான குறித்த முகாமையாளர் அவரது மனைவியின் சகோதரனுக்கு பணத்தை வழங்கி , தான் வங்கிக்கு கொண்டு செல்லவிருந்த 23 இலட்சம் ரூபாவை கொள்ளையடிப்பதற்கு இருவரை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளார்.
அவரது இந்த திட்டத்திற்கமையவே பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொழில் புரியும் நிறுவனத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொண்ட பணத்தை மீள செலுத்துவதற்காக இவ்வாறு திட்டமிட்டு போலியாக முறைப்பாடளித்துள்ளார்.
எனவே முறைப்பாடளித்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் ஏனைய சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு போலியாக முறைப்பாடளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே குறித்த முகாமையாளருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.