முல்லையில் நிலவும் கடும் வரட்சியினால் சிறுபோகச் செய்கை பாதிப்பு…!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலவும் வரட்சியினால் வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவாகக் காணப்படுவதனால் இரண்டு ஆண்டுகள் சிறுபோகச் செய்கையை முற்றாக மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக விவசாய அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.
இம் மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ் காலபோகத்தில் சுமார் 1060 ஏக்கர் நிலப்பரப்பில் 2260 வரையான பயனாளிகள் நெற்செய்கையையும் 135 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் 950 வரையான விவசாயிகள் ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலமும் விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வருடங்களிலும் தற்போதும் காணப்படும் கடும் வரட்சியினால் சிறுபோகச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்த குடும்பங்கள் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வவுனிக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.