நித்தகைகுளத்தை மாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான அணி பார்வையிட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்திற்கு உட்பட்ட நித்தகைகுளத்தை வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையிலான அணி சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
தொடர்ச்சியாக மாவட்ட செயலகம் மற்றம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறுகூட்டங்களில் குறித்த குளத்தினையும் அதற்கான வீதிகளையும் புனரமைத்து தருமாறு மக்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த குளத்தினை பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,வடமாகாண நீர்பாசன பொறியியலாளர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவை திணைக்களங்களின் அதிகாரிகள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் குறித்த பகுதி கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் நேற்று (21) காலை 9.30 மணியளவில் குளத்தை சென்று பார்வையிட்டுள்ளனர்
குறித்த குளத்தின் உடைவு ஏற்பட்டுள்ள பகுதி கலிங்கு பகுதி அணைக்கட்டு மற்றும் அதன்கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல்கள் மற்றும் நீர்பாச வாய்க்கால்கள் என்பனவற்றை பார்வையிட்டு அவற்றை அபிவிருத்தி செய்து மக்களுக்கு வழங்கு வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக விவசாயிகளால் போர்காலத்திற்கு முன்பாக பாதிக்கப்பட்ட வயல்நிலங்களையும் குளத்தினையும் மீளவும் பயன்படுத்துவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்ட்டு வந்துள்ள நிலையில் அதற்கமைவாக நித்தகைகுளம் என்ற கைவிடப்பட்ட குளத்தினையும் அதன்கீழான விவசாய நிலங்களையும் மீளவும் பயிர்செய்கையில் ஈடுபடுத்த நாங்கள் பார்வையிட்டுள்ளோம்
இதன்மூலமாக இந்த குளத்தினை விவசாய திணைக்களம் விவசாய மக்களின் உதவியுடன் புனரமைத்து மக்களுக்கு வழங்க எண்ணியுள்ளோம்.என்று தெரிவித்தார்
இங்கு கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன்
நித்தகை குளம் 1982 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இங்குள்ள மக்கள் இந்த வயல் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அது திருத்தவேலைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் போது போர் ஏற்பட்டதால் அது நிறுத்தப்பட்டுள்ளது இதன் கீழ் பல வயல் நிலங்கள் இன்றும் செய்கை பண்ணப்படாமல் பாழடைந்து போயுள்ளது.
பாழடைந்து போயுள்ள இந்த குளத்தினை திருத்தி மக்களுக்கு வழங்குவதற்கா மாவட்ட செயலாளரின் உதவியினை பெற்று நீர்பாசன திணைக்களத்தின் ஊடாக அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இன்று விவசாயிகளால் புனரமைத்து தருமாறு கோரப்பட்டுவரும் குருந்தூர் குளத்தினையும் குறித்த தரப்பினர் பார்வையிட்டுள்ளனர்.