மிகமோசமான நெருக்கடியை சந்திக்கபோகும் முஸ்லிம் சமூகம்..! 11 முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை, தலைவர்கள் கைது, புர்காவுக்கு தடை, பாட புத்தகங்களில் திருத்தம்..
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடன் இயங்கும் 11 அமைப்புக்களை அடையாளப்படுத்தியுள்ள அரசாங்கம் அவற்றை தடை செய்வதுடன் அமைப்புக்களின் தலைவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக,
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தொிவித்திருக்கின்றார். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தைக் கொண்டு புர்காவை உடனடியாக தடை செய்யவும், இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் உள்வாங்கப்பட்டுள்ள வஹாபி,
சலபி கொள்கைகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை சபையில்
முன்வைத்து கருத்துக்களை கூறிய போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,இலங்கையில் அதிகளவிலான மதரசா பாடசாலைகள் முறையாக செயற்படவில்லை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இலங்கையில் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் 5 வயது தொடக்கம் 16 வயது வரையில் அரச கல்வியை தொடர்வது கண்டிப்பானது எனவும் அரச கொள்கைக்கு அமைய கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை நிராகரிக்கும் சகல பாடசாலைகளையும் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நீண்ட காலமாக முறையான கல்வியை பெற்றுக்கொடுக்கும் மதராசாக்களும் இயங்குகின்றது என்பதையும் நாம் நினைவுபடுத்துகின்றோம்.
அத்துடன் பாடசாலை பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படைவாத கருத்துக்களை நீக்கவும் இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முதலாம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரையிலான பாடப்புத்தகங்களில் ஏனைய மதத்தவருக்கு எதிராக
செயற்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதுடன், வஹாபி, சலபி கொள்கைகள் சூட்சமமாக பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த தாக்குதலுக்கு ஏற்ற சூழலை நேரடியாகும் மறைமுகமாகவும் உருவாக்கிக்கொடுத்த 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை விரைவாக தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
மேலும், சஹரானின் அமைப்பு உட்பட இலங்கையில் செயற்படும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யவும் இந்த அமைப்புகளை தடைசெய்ய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுத்து வருகின்றோம். குறிப்பாக வன் உம்மா, ஹிசபுத் தாஹிர், முஜஹர்தீன் அல்லாஹ்,சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அத்துடன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் என்ற சிலவற்றை
அடையாளம் கண்டுள்ளதுடன் அவற்றில் பிரதானமாக புர்காவை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சிறுவர் மற்றும் பெண்களை கருத்தில் கொண்டு சிறுவர் திருமண சட்டத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாது இந்த தாக்குதலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட சகல நபர்களுக்கும் உயரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே விரைவாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாம் இஸ்லாமிய மதத்தை கட்டுப்படுத்தவில்லை. அதில் வளரும் அடிப்படைவாததையே நாம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். குறிப்பாக வஹாபி கொள்கையை தடுக்கவே
நாம் நடவடிக்கை எடுக்கின்றோம். இந்த செயற்பாடுகளில் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கின்றது. அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிசீலனைகளை
நடைமுறைப்படுத்த வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.