தங்க மலை கண்டுபிடிப்பு!! -தகவல் அறிந்து போட்டி போட்டு தோண்டி எடுத்த மக்கள்-
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமத்தில் உள்ள ஒரு மலையில் காணப்படும் மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது உள்ளதாக உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.
மண்ணில் தங்கம் உள்ள செய்தி தீ போல பரவத் தொடங்கியதை அடுத்து கிராமம் முழுவதும் உள்ள மக்கள் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டிய மக்கள், அந்த மண்ணை மூட்டை கட்சி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டில் வைத்து தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனிடையே இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.