கொவிட் -19 தடுப்பூசி வழங்க 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரச ஊழியர் கைது..!
கொவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்கு 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு மருதானை பகுதியில் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் இடத்தில், தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவரும் நபர்களிடம் இலஞ்சம் கோரப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் கவனம் செலுத்திய புலனாய்வு பிரிவினர் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இன்று சனிக்கிழமை சந்தேகநபர் 1000 ரூபாய் பணத்தை
இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கொழும்பு மாநகர சபையின் கீழ் செயற்பட்டு வரும் சுகாதார வைத்திய பிரிவின் அலுவலக உதவியாலரான 40 வயதுடைய நபரொருவரே
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் , அவரை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்காக
இதுவரையில் எவரேனும் இலஞ்சமாக பணம் வழங்கியிருந்தாலோ அல்லது எவரேனும் இவ்வாறு பணம் வழங்குமாறு தெரிவித்தாலோ , அது தொடர்பில் 071-8591563 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொண்டு
மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவிக்க முடியும்.