பைடனின் உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்!! -இராணுவ அலுவலக இயக்குனர் பொறுப்பும் அவருக்கே-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய கேரளாவை பூர்வீகமாக கொண்டவரான மஜீ வர்க்கீஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டிருந்தார்.
ஜோ பைடனின் தேர்தல் வெற்றிக்கு பின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் பதவியேற்பு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொண்ட தொடக்க குழுவின் 4 உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை இராணுவ அலுவலக இயக்குனராகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வெள்ளை மாளிகையில் பணிபுரிவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக அவர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.