5 கோடி செலவில் அபிவிருத்தியாம்..! ஒரு பயனும் இல்லை என்கின்றனர் மீனவர்கள், கேள்வி கேட்டால் விழி பிதுங்கும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
5 கோடி செலவில் அபிவிருத்தியாம்..! ஒரு பயனும் இல்லை என்கின்றனர் மீனவர்கள், கேள்வி கேட்டால் விழி பிதுங்கும் அதிகாரிகள்..

நல்லாட்சி அரசாங்க காலத்தில் சுமார் 5 கோடிக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட அராலி மேற்கு இறங்குதுறை அப்பகுதி மீனவ அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றப்படாத திட்டமாக 

முடிவுறுத்தப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அராலி மீனவ மக்களின் வாழ்வாதார தொழிலாக மேற்கொள்ளப்படும் மீன்பிடி குறித்த இறங்குதுறையைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த அராலி இறங்குதுறை மீனவ அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய தமது இறங்கு துறையை ஆழப்படுத்தி தமது வள்ளங்கள் கட்டுவதற்கு ஏற்ற வகையில் இறங்குதுறையை புனரமைத்துத் தருமாறு கேரிக்கை முன்வைத்து வந்தனர்.

இதன் பயனாக குறித்த இறங்குதுறை 2017 ஆம் ஆண்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மீனவர்களின் கோரிக்கையான இறங்குதறையை ஆழப்படுத்தும் கோரிக்கை காற்றில் பறந்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு 

மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சினால் சுமார் 5 கோடிக்கு அதிகமான (50,450,221.70)ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்ட செயலகத்தினால் குறித்த இறங்குதுறை துறை புனரமைக்கும் வேலைத் திட்டங்கள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த இறங்குதுறையை தனியார் நிறுவனம் 2018ஆம் ஆண்டு புனரமைப்பு வேலைகள் யாவும் நிறைவடைந்ததாகத் தெரிவித்து விழாக்கள் ஏதும் இடம்பெறாமலே மீனவர்களிடம் குறித்த துறை ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த துறையை 

அப்பகுதி மீனவர்கள் பயன்படுத்த முடியாது அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இறங்குதறை ஆழப்படுத்தி தருவோம் என தமக்கு வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் குறித்த திட்டத்தின் மூலம் இறங்குதுறை ஆழப்படுத்தப்படாமலே நிறைவு செய்யப்பட்டதாக

அப்பகுதி மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.குறித்த திட்டத்தை செயல்படுத்தும்போது யார்? இந்த திட்டத்தை செயற்படுத்துகிறர்கள் என தமக்கு ஏதும் தெரியாத நிலையில் பின்பு தான் குறித்த திட்டம் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

என அறிந்ததோடு குறித்த திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது எவ்வளவு நிதி செலவு செய்தார்கள் என இன்றுவரை தமக்குத் உறுதியாக தெரியப்படுத்தவில்லை என மீனவ அமைப்புகளின் குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம். 

இவ்வாறான நிலையில் குறித்த திட்டம் தொடர்பில் சங்கானை பிரதேச செயலகத்துக்கு 17.12.2020 அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயனாக குறித்த திட்டம் சுமார் 5 கோடி மேல் மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மை தெரியவந்தது.


அப்பகுதி மீனவ அமைப்புகளிடம் கேட்டதற்கு குறித்த திட்டம் முடிவுற்றதாக தமக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 2 கோடி ஒதுக்கீட்டில் குறித்த திட்டம் இடம்பெற்றதாகவே அப்போது அறிந்ததாகவும் இவ்வாறான பாரிய நிதி ஒதுக்கீட்டில் 

தமது இறங்கு துறையை ஆழப்படுத்தாமல் குறித்த இறங்கு துறையில் என்ன திட்டத்தை மேற்கொண்டார்கள்? என அப்பகுதி மீனவ அமைப்பு கேள்வியை முன்வைத்தது.சங்கானை பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 

கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் குறித்த திட்டத்துக்கான நிதி எந்த அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த திட்டம் முடிவடைந்த நிலையில் ஏன் குறித்த திட்டம் தொடர்பான காட்சிப்படுத்தல் பலகை போட வில்லை 

என்ற கேள்விக்கு யாழ் மாவட்ட செயலகம் குறித்த திட்டத்தை தமக்கு வழங்கும்போது அவ்வாறான ஒரு நிபந்தனையை தமக்கு வழங்கவில்லை என சங்கானை பிரதேச செயலகம் பதில் வழங்கியது.இதனடிப்படையில் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு 

அனுப்பப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயனாக பின்வரும் விடயங்கள் அம்பலமாகியது.அராலி இறங்குதுறை தொடர்பான ஒப்பந்தம் கொழும்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 23 11 2017 வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 

சுமார் 3 கோடிக்கு அதிகமான தொகையில் (38,333,000)ரூபாய்க்கு அப்போதைய யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகனால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது 

குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட (38,333,000) ரூபாய் தொகைக்கு அரசாங்க வரி அல்லாமல் குறித்த நிறுவனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 23. 11. 2017 - 31 .3 .2018 இல் குறித்த திட்டம் முடிவுறுத்த எதிர்பார்த்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதும் 

அப்பகுதி மீனவர்கள் முன் வைத்த கோரிக்கையான இறங்குதறை ஆழப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை குறித்த திட்டத்தில் உள்வாங்கப்படாமை வெளிச்சத்துக்கு வந்தது.குறித்த திட்டத்தை பெற்ற தனியார் நிறுவனம் குறித்த இறங்குதுறை புனரமைப்புக்காக்காக 

சுமார் 4 கோடிக்கு அதிகமான(43,337,500) ரூபா தொகையை தனது தொகை மதிப்பாக வழங்கியுள்ளது. குறித்த திட்டத்துக்காக அமைச்சினால் 5 கோடிக்கு அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தினால் 

குறித்த ஒப்பந்த நிறுவனத்துடன் சுமார் 3 கோடி 90 இலட்சத்துக்கு உற்பட்ட தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நிறுவனம் குறித்த திட்டத்திற்காக 4 கோடிக்கு அதிகமான தொகையை தனது ஒப்பந்தத்தின் தொகைமதிப்பாக வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. 

குறித்த திட்டம் நிறைவடைந்த நிலையில் குறித்த திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட மீதமுள்ள 50(gabion boxes) களை பொறுப்பேற்று களஞ்சியப்படுத்துமாறு 11.10.2018 யாழ் அரசாங்க அதிபரினால் எழுத்து மூலமான பணிப்புரை கடிதம் 

குறித்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியமை தெரியவந்துள்ளது.இவ்வாறான நிலையில் குறித்த திட்டம் இடம்பெற்ற அராலி இறங்கு துறையில் பெருமளவிலான கருங்கற்கள் மீதமாக உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தால் 

எஞ்சிய பொருட்களை குறித்த நிறுவனத்திடமிருந்து பொறுப்பேற்கும் போது ஏன் குறித்த கருங்கற்களை கருத்தில் கொள்ளவில்லை என்ற சந்தேகம் எழுகின்றது.குறித்த இறங்குதுறைத் திட்டம் முழுமை பெறவில்லை என மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டும் நிலையில் 

எஞ்சிய கருங்கற்களை ஏற்றுவதற்காக மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்டோம் எனத் தெரிவித்து சிலர் வாகனங்களில் வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அரசாங்க சுற்று நிருபங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் 2 மில்லியனுக்கு மேற்பட்ட திட்டங்கள் அனைத்துக்கும் திட்டம் தொடர்பான காட்சிப்படுத்தல்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் 

என அறியப்படும் நிலையில் குறித்த இறங்கு துறை திட்டத்துக்கு மட்டும் ஏன் ? திட்டக் காட்சிப்படுத்தல் இடம்பறவில்லை என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த மாதம் சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் 

குறித்த திட்டம் தொடர்பில் எஞ்சிய கருங்கற்கள் தொடர்பிலும் குறித்த திட்டத்தில் என்ன இடம்பெற்றது என தெரியப்படுத்துமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.குறித்த அபிவிருத்தி குழுக் கலந்துரையாடலில் குறித்த இறங்குதுறையை தொடர்பில் உரிய தெளிவுபடுத்தல்கள் இடம்பெறாத நிலையில் 

மாவட்ட செயலகத்தில் குறித்த விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு கேட்கப்பட்ட விடையங்கள் தொடர்பில் பதில் வழங்கப்படும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனால் தெரிவிக்கப்பட்டது.

ஆகவே குறித்த இறங்கு துறை புனரமைப்பில்அப்பகுதி மீனவ மக்களினது கோரிக்கையையும் எதிர்பார்ப்பும் ஈடு செய்யப்பட்டதா? என ஆராய்வதேடு குறித்த திட்டத்தில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் உரிய தரப்பினர்கள் ஆராயவேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு