சுமந்திரன் அணியோடு ஒற்றுமை சாத்தியமற்றது! ஆனால் முடிவை செய்வாய் கிழமை சொல்வோம் - சிறீகாந்தா..

ஆசிரியர் - Editor I
சுமந்திரன் அணியோடு ஒற்றுமை சாத்தியமற்றது! ஆனால் முடிவை செய்வாய் கிழமை சொல்வோம் - சிறீகாந்தா..

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். அவருக்கு நாங்களும் புன்முறுவலோடு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து கூட்டாக செயற்பட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தயாராக உள்ளது.

ஆனால் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் கொள்கை ரீதியாகவும், கடந்த கால அனுபவ ரீதியாகவும் பல மனஸ்தாபங்கள் உள்ளன.

எதற்காக இணையுமாறு அழைப்பு விடுக்க படுகிறது ? தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியத்துடன் சமரசம் செய்துவைப்பதற்காவா? அல்லது இருக்கின்ற பதவிக் கதிரைகளை பறிபோகவிடாமல் தக்கவைப்பதற்காகவா? அல்லது கடந்தகாலம் போல் ஆட்சியாளர்களுடன் மறைமுக சமரசம் செய்வதற்காக? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒற்றுமை என்பது கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமானால் நாங்கள் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு ஆகும்.

முதலிலே தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமைப்பட முடியாதவர்கள் ஒற்றுமைக்கான அழைப்பை புன்முறுவலோடு விடுப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

இலங்கை தமிழரசுக் கட்சியோடு இணைந்து வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளோம். 

அதில் தமிழ்த் தேசிய கட்சியின் முடிவை உறுதியாக தெரிவிப்போம் எனத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு