SuperTopAds

மாதக்கணக்கில் இயங்காத வைத்தியசாலை குளிரூட்டி!- என்பிபி உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்?

ஆசிரியர் - Admin
மாதக்கணக்கில் இயங்காத வைத்தியசாலை குளிரூட்டி!- என்பிபி உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள்?

ஆளுங்கட்சியை சேர்ந்த பிரதி அமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் வன்னி பிரதேசத்தில் இருந்தபோதிலும் வவுனியா வைத்தியசாலையில் பல நாட்களாக இயங்காமல் இருக்கின்ற பிரேத அறையின் குளிரூட்டியை சீர் செய்வது தொடர்பில் தமது சுகாதார அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசெல்லாமை கவலைக்குரிய விடயம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (18) செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிரூட்டி பல மாதங்களாக செயற்படாமல் காணப்படுகிறது. இதன் காரணமாக மரணமடைந்தவர்களின் உறவினர்கள் தமது சொந்த செலவில் சடலத்தை செட்டிக்குளம் வைத்தியசாலையின் குளிரூட்டியில் வைத்து மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பல ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து சடலத்தை செட்டிக்குளத்துக்கும் வவுனியாவுக்கும் கொண்டுசெல்லவேண்டிய நிலைமை உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுகிறது. இது இந்த பிரதேசத்து மக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகும்.

தமது ஆட்சியில் பாலும் தேனும் ஓடும் என்று அறிக்கை விட்டு மக்களை பொய்யாக திசை திருப்பி பிரதி அமைச்சுக்களையும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்தியினர் வெறும் வாய்ச் சவால் விடுவதற்கு மாத்திரமே சிறப்பானவர்களாக காணப்படுகின்றனர்.

தமது பிரதேசத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுவது தொடர்பில் அறிந்துகொள்ளவோ அதற்கான நடவடிக்கையை தமது ஆட்சியில் உள்ள சுகாதார அமைச்சருடன் உடன் கதைத்து செயல்படுத்தவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர்கள் தான் மீண்டும் மக்களிடம் பொய்களை கூறி திசை திருப்ப முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மாத்திரமல்ல, தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கூட கேட்பதற்கு தயாரில்லை என்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே சாட்சியாக உள்ளனர்.

மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தேவைகளை அறிந்துகொள்ள முடியாத பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாம் பாரிய சாதனைகளை செய்துவிட்டதாக தம்பட்டம் அடிப்பதிலேயே காலத்தை கடத்தி வருகின்றனரே தவிர, ஓர் அத்தியாவசிய தேவையாக காணப்படுகின்ற வடக்கில் முக்கியமான தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையின் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாதவர்களாகத்தான் இவர்கள் உள்ளார்கள் என்பதே உண்மை.

இது மாத்திரமன்றி வவுனியா வைத்தியசாலையில் கோலாகலமாக திறக்கப்பட்ட இருதய சிகிச்சை பிரிவு இதுவரை செயற்படுத்தப்பட முடியாமல் வைத்திய நிபுணர்கள் இன்றி மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இது தொடர்பிலும் அவர்கள் அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை.

எமது கருத்துக்களை கேட்கக் கூட தயாராக இல்லாத இந்த அரசாங்கம், தாமாவது தங்களது பிரதேசத்தின் தேவைகளை அறிந்து, அவற்றை செயற்படுத்த முன்வர வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.