SuperTopAds

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்!! -மருத்துவ பணியாளர்கள் களத்தில்-

ஆசிரியர் - Editor II
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம்!! -மருத்துவ பணியாளர்கள் களத்தில்-

மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்று இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் அந்நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் அரசுக்கும் அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

தொடர்ந்து ஒரு வருடத்துக்கு அங்கு இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பின் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌.‌ இதுதொடர்பாக மியான்மர் இராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி, உள்ளிட்டவர்களை உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில் சுமார் 70 வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ துறையினர் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மியான்மர் சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற குழு தெரிவித்துள்ளது.