டுவிட்டரில் வன்முறையை தூண்டிய டிரம்ப்!! -கணக்கை அதிரடியாக முடக்கிய நிர்வாகம்-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இது ஒரு புறமிருக்க வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார்.
டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினரை மீறி நுற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.
அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.
குறிப்பாக, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பேசிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் இருந்து சில டுவிட்டுகள் செய்தார்.
இந்த டுவிட்டுகள் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததால் அவற்றை டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. மேலும், விதிகளை மீறியதற்காக ஜனாதிபதி டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.