இலங்கையில் 11 நாட்களில் 50 பேர் உயிரிழப்பு..! 11 நாட்களில் 1398 பேர் கைது..! பொலிஸார் அதிர்ச்சி தகவல்..
இலங்கையில் கடந்த 11 நாட்களில் மட்டும் 50 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
மேலும் மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த 11 நாட்களில் 1,398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் 613 வீதி மற்றும் வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் சிக்கி 132 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 291 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் நாளொன்றுக்கு ஐவர் என்ற அடிப்படையில் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பிருந்தும் கவனக்குறைப்பாட்டின் காரணமாக அதனை தவிர்த்துக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தரவுகளுன் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்
இவ்வாறு தரவுகள் கிடைக்கப்பெறாத விபத்துக்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது. மோட்டார் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும்
விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக இன்று காலை ஆறு மணியுடன்
முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த 11 நாட்களில்
மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 1,398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.