யாழ்.நகரில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு..! 20ம் திகதிவரை விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல் உத்தரவிட்டுள்ளார். 

ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது அலைபேசியையும் பறித்து சென்றது.

நாடுமுழுவதும் கோரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பேணாது தமிழ்க் கொடி எனும் அமைப்பு உதவி வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி , 

அது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முகநூலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பதிவொன்றினை இட்டிருந்தார்.

பதிவினை நீக்க கோரி தமிழ்க் கொடி எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்ததுடன் மிரட்டலும் விடுத்திருந்தனர். அதற்கு ஊடகவியலாளர் சம்மதிக்காத நிலையில் 

நேற்றைய தினம் புதன்கிழமை அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , அவரது அலைபேசியையும் பறித்து சென்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் விமல் , கிஷோகுமார் மற்றும் ஜீவமயூரன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், வீட்டொன்றினுள் அத்துமீறி நுழைந்து நபர் ஒருவரை தாக்கி அவரது உடமையிலிருந்த 38ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தொலைபேசியை கொள்ளையடித்தமை என்ற குற்றசாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மூவரையும் முற்படுத்தினர். 

சந்தேக நபர்கள் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த மன்று, மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு