திட்டமிடாமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம்..! நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கொத்தணிகள்..
கொரோனா தொற்று ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அத்தகைய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் முறையான திட்டமில்லாமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் எழுந்துள்ளது.
மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின பிரதிநிதி வைத்தியர் ஹரித்த அளுத்கே, ஆபத்தான பகுதிகளை கண்காணிக்கவேண்டும். என்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு கவனிக்கப்படவில்லை. எனவும் கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், மேல் மாகாணத்தில் இரண்டு வாரங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மேல் மாகாணத்தை முற்றாக முடக்கவேண்டும்
என்பது எமது நிலைப்பாடு அல்ல. என்றாலும் கொரோனா எச்சரிக்கை அதிகம் இருக்கும் பிரதேசங்கள் தொர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் கடந்த ஒருவாரத்தில் அதிகளவான நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன்
அதிகளவான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான பிரதேசங்களை இனம்கண்டு, அந்த பிரதேசங்களுக்கான போக்குவரத்தை வரையறுக்க முறைமையொன்றை ஏற்படுத்தவேண்டும். அவ்வாறு இல்லாமல் எந்தவித ஆய்வும் இல்லாமல் மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதானால்
கொரோனா தொற்று நாடு பூராகவும் பரவும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் புதிதாக கொரோனா கொத்தணிகள் உருவாகி இருக்கின்றன. கைத்தொழிற்சாலைகள், பொலிஸாரினால் ஏற்பட்டிருக்கும் கொத்தணி 350 பேரை தாண்டி இருக்கின்றது.
சிறைச்சாலையில் இருந்தும் கொத்தணி உருவாகி இருக்கின்றது. அதனால் புதிதாக உருவாகும் கொத்தணிகளை நாங்கள் எந்தளவுக்கு கட்டுப்படுத்துகின்றோம் என்பதன் அடிப்படையிலே எதிர்காலத்தில் நாட்டை முற்றாக முடக்குவதா
அல்லது சாதாரண மனித வாழ்க்கையை கொண்டு செல்லும் வகையில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்துவதா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றார்.