இலங்கையில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா..? சுகாதார அமைச்சு விளக்கம், சமூக பரவல் என்பது மிக ஆபத்தானது என எச்சரிக்கை..!
இலங்கையில் மினுவாங்கொட - பேலியகொட போன்ற பாரிய கொரோனா கொத்தணிகள் உருவானது எப்படி? என்பதை நிரூபிப்பதற்கான அறிவியல் சான்றுகள் கிடைக்கவில்லை. என்பதாலேயே சமூக தொற்றை உறுதிப் படுத்தும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்திய கலாநிதி ஜெயருவான் பண்டார, தற்போதைய நிலையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியானால் அது ஒரு ஆபத்தான சூழ்நிலை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளருக்கு கொரோனா தொற்று உள்ளமை வெளிப்பட்டதும், 22 மாவட்டங்களில் வசிக்கும் அந்த ஆடை தொழிற்சாலையின் பணியாளர்களின் தொடர்புகளை அதிகாரிகள் கண்டுபிடிக்க முடிந்தது.
எனினும் பேலியகொட மீன் சந்தைக்கு வருகை தந்தோர் மற்றும் அவர்களின் தொடர்புகள் குறித்து எந்த பதிவும் இல்லாததால், பேலியகொட மீன் சந்தைக் கொத்தணிக்கும் சுகாதாரத் துறையினர் அதே முறைமையைப் பின்பற்ற முடியாது.
எனவே, மினுவாங்கொட கோரோனா கொத்தணியைக் காட்டிலும் பேலியகொட கொத்தணியின் தோற்றத்தை அடையாளம் காண்பது கடினமான பணியாக இருக்கும். பேலியகொட கொரோனா பரவல் கொத்தணி, மினுவாங்கொட கொத்தணியைவிட பெரிய சவால்களையும்
அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும். மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய ஒருவர் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றிருந்ததாக சில தரப்புகள் கூறுகின்றன. இதுபோன்ற அறிக்கைகள் ஆதாரமற்றவை. பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால்
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு வைரஸ் பரவியிருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே முழுமையான விசாரணைகள் இல்லாமல் அதிகாரிகள் கொத்தணியின் தோற்றம் அல்லது சமூகத் தொற்று இருப்பதை உறுதிப்படுத்த முடியாது.
நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள். சமூகப் பரவல் குறித்த அறிவிப்புக்குக் காத்திருப்பதற்குப் பதிலாக,
வைரஸ் பரவாமல் இருக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.