பிளவுகளை ஏற்படுத்த முற்படுவது தமிழ் தரப்புக்கு நல்லதல்ல!

ஆசிரியர் - Admin
பிளவுகளை ஏற்படுத்த முற்படுவது தமிழ் தரப்புக்கு நல்லதல்ல!

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்குக் கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமான வாக்குகளைப் பெற்றதோடு அநேகமான உள்ளூராட்சிச் சபைகளில் அதிக ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஆனால் புதிய உள்ளூராட்சித் தேர்தல் நடைமுறைகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இதனால் அதிக ஆசனங்களை உள்ளூராட்சிச் சபைகளில் பெற்ற கட்சிகள், அந்தச் சபைகளில் ஆட்சியமைக்கும் பொருட்டு ஏனைய கட்சிகள் அவற்றுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், இது தொடர்பாக எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

இதேவேளை உள்ளூராட்சிச் சபைகளின் உறுப்பினர்களிடையே பகிரங்க வாக்கெடுப்புகளை நடத்தி, அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டுமெனக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் கூறியிருந்தார். இதன் மூலமாகக் கட்சித் தாவல்களைத் தடுத்து நிறுத்த முடியுமென அவர் கருதியிருக்கலாம்.

சம்பந்தனின் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் சகல கட்சிகளுக்கும் உதவக் கூடியவை ஆனால் தமிழ்க் காங்கிரஸின் தலைவரான கஜேந்திரகுமார், சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகவே ஆட்சியமைக்கின்ற உரிமையை நிலைநாட்டவேண்டு மென அவர் கூறுகிறார்.

ஆனால் இதற்காக அவர் கூறுகின்ற காரணம், குழப்பத்துக்குரியதொன்றாகவே காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் அவர் சார்ந்துள்ள தமிழ்த் தேசியப் பேரவை ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு சார்பாகத் தெரிவான பத்து உறுப்பினர்கள் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சியே சம்பந்தன் பகிரங்க வாக்கெடுப்புக்கான கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

யாழ். மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பின்உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்துகின்றதொரு முயற்சியொன்றாகவே கஜேந்திரகுமாரின் இந்தக் கருத்தைக் கருத வேண்டியுள் ளது.

கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதோ அல்லது விடுப்பதோ கஜேந்திரகுமாரது தனிப்பட்ட உரிமையாகும். இதில் தலையிடுகின்ற அதிகாரம் எவருக்குமே இல்லை. ஆனால் கட்சிகளைப் பிளவுபடுத்துகின்ற முயற்சிகளில் அவர் ஈடுபடுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

யாழ் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஏற்கனவே கட்சியால் அறிவிக்கப்பட்ட ஆர்னல்ட், தேர்தல் முடிவுகள் வௌியானதன் பின்னர் கூட்டமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மேயர் பதவிக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கஜேந்திரகுமார் கூறுவது போன்று, ஆர்னல்ட்டின் தெரிவு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்.மாநகர சபைக்குத் தெரிவான பத்து உறுப்பினர்கள் அதிருப்தி கொண்டிருப்பார்களானால், ஆர்னல்ட்டை மேயராகத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்கள் தமது ஆதரவை வழங்கியிருக்க மாட்டார்கள்.

கஜேந்திரகுமார் கூறிய அந்தப் பத்து உறுப்பினர்களையும் கண்டுபிடிப்பது கூட்டமைப்பின் தலைமைக்கு ஒரு சிரமமான காரியமல்ல. ஆனால் ஒரு புதிய கதையைக் கூறுவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் புதுக் குழப்பம் ஒன்றுக்கு வித்திடுவதாகவே இதனைக் கருத முடிகின்றது.

இதேவேளை வடக்குக் கிழக்கில் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்ற 40 உள்ளூராட்சிச் சபைகளில் ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ளதாகக் கூட்டமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார். இதற்கேற்ப தமக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வருகின்ற கட்சிகளின் நிபந்தனைகள் கேட்டறியப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையில் தமதுகட்சி ஆட்சியமைப்பதைக் கஜேந்திரகுமார் விரும்புவாராக இருந்தால் ஏனைய கட்சிகளுடன் பேசி அவர்களின் ஆதரவைப் பெற்று அதை நிறைவேற்றி வைப்பதே நேர்மையான செயலாகும். இதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.

ஆனால் இதை விடுத்து கட்சியொன்றை உடைத்துப் பிளவுபடுத்துவதற்கு அவர் முயற்சி செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவரது கருத்து ஏனைய உள்ளூராட்சிச் சபைகளிலும் குழப்பங்களையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதற்கு வழிகோலி விடும்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைப் போன்று இனிமேல் இடம் பெறப்போகும் தேர்தல்களின் முடிவுகளும் அமைந்து விடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே தற்போது கிடைத்த வெற்றியை மனதில் கொண்டு கஜேந்திரகுமார் தரப்பினர் கர்வப்படுவதால் பயனொன்றும் கிடைக்க மாட்டாது.

இந்த நாட்டின் தமிழ் மக்கள் மோசமானதொரு கட்டத்தில் தற்போதுள்ளனர். தென்னிலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் தமிழர்களையும் பாதிக்கவே செய்யும்.

ஏனென்றால் அந்தக் குழப்பங்களின் விளைவுகள் தமிழர்களின் தலைகளிலேயே பேரிடியாக விழுவதற்கான சாத்தியங்கள் உள்ளதை நாம் மறுக்க முடியாது.

இந்த நிலையில் தமிழர்களிடையே மேலும் பிளவுகளை ஏற்படுத்துவதற்குச் சில அரசியல்வாதிகள் முற்படுவது தமிழர் தரப்புக்கு நல்லதல்ல என்பதை நாம் உணர்ந்தும், புரிந்தும் கொள்ள வேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு