ஜெலி மீன்களை கட்டுப்படுத்தக் கோரி கடலன்னையிடம் முறையிட்ட முல்லைத்தீவு மீனவர்கள்!

மீனவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஜெலி மீனை அகற்றி கடற்றொழில் மேற்கொள்ள வழியேற்படுத்த வேண்டும் என்று கோரி நேற்று கடலன்னையிடம் முல்லைத்தீவு மீனவர்கள் வேண்டினர் . அதற்காகச் சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டனர். அளம்பிலில் உள்ள உப்புமாவெளி காளி கோயிலிலும், வேளாங்கண்ணி ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அளம்பில் பங்குத் தந்தை கடல் அன்னைக்கு சிறப்பு ஆசீர்வதிப்பையும், கரையோர மக்களின் தொழிலுக்கு வழிவிடக் கோரியும் சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டார். அளம்பில் கடலில் ஜெலி மீன்கள் அதிகரிக்கின்றன. தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரைவலைத் தொழிலில் ஈடுபடும்போது ஜெலி மீன்களே அதிகம் சிக்குகின்றன. அவை உடலில் பட்டால் கடியை ஏற்படுத்தும். முன்னர் ஒரு காலப்பகுதியில் மாத்திரமே அவை வரும். இப்போது அதிகம் வரத் தொடங்கியுள்ளன. அதனால் மீன்களின் வரத்துக் குறைந்துவிட்டது. ஜெலி மீன்களை அகற்றக்கோரியே கடல் அன்னையிடம் வழிபாடு நடத்தினோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.