கொவிட் -19 அபாயத்தை மக்கள் மறந்ததன் விளைவே இது..! நோய் பரவலை கட்டுப்படுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வழங்கியுள்ள உத்தரவு..
அரசாங்கம் வழங்கிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் பேண தவறியமையினாலேயே மீண்டும் கொரோனா பரவலுக்கு காரணம். என ஜனாதிபதியுடனான சந்திப்பில் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், கொரோனா தொடர்பில் ஊடகங்கள் மக்களை விழிப்புட்ட எடுத்திருந்த நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் கொரோனா அபாயம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியினர் மற்றும் சுகாதார அமைச்சு, அதிகாரிகளை இன்று ஜனாதிபதி சந்தித்துள்ளார். இதன்போதே மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
கொரோனா தடுப்புக்கு அரசு வழங்கி இருந்த அறிவுரைகளை பின்பற்றுதல் மக்கள் மத்தியில் குறைவடைந்ததே நோய் தொற்றியதற்கான அடிப்படை காரணமாகும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். கோவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகின்றது. அது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஊடகங்களினால் மக்களை தெளிவூட்டுவதற்காக
முன்னெடுக்கப்பட்டு வந்த பரப்புரை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சாதாரணமாக கொரோனா நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவனங்களிலும் தெரிவின் அடிப்படையில் பிசிஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழுக்கள் அடிப்படையில் அதிகமானோர் தொழில் புரியக்கூடிய நிறுவனங்களில் பிசிஆர் பரிசோதனையை தெரிவின் அடிப்படையில் அடிக்கடி நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தொழிற்சாலையில் அது முறையாக இடம்பெறவில்லை என்பது தற்போது தெரிய வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். தற்போதைய நிலமையை புரிந்துகொண்டு
மீண்டும் அதனைத் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பொறுப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சமூகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட முன்னெடுப்புக்களை நினைவுப்படுத்திய ஜனாதிபதி, மீண்டும் அவ் வேலைத்திட்டங்களை பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார். நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் ஏனைய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் தெரிவின் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் துறையினரின் பங்களிப்புடன் நிறுவன ஊழியர்களை தெரிவின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கோவிட் நோய்த் தடுப்புக்கு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள
பல விடயங்களை மக்கள் உரிய முறையில் பின்பற்றுவதில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். தற்போதைய சட்டதிட்டங்களை கோவிட் தடுப்பை நோக்கமாகக் கொண்டு வர்த்தமானியில் வெளியிடும் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்காக சுதேச மருந்துகளை பயன்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க
ஆகியோருடன் கோவிட் நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் என்றுள்ளது.