குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்து கொள்ளை..! இளம் தம்பதியை மடக்கியது பொலிஸ், விசாரணையில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்து வீதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களுக்கு உதவுவதாக கூறி அழைத்துச் சென்று ஆள்நடமாட்டமற்ற பகுதிகளில் வைத்து நகைகள், மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் இளம் தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் வென்னப்புவ லுணுவில சிரிகம்பள பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தங்கொட்டுவ நகரில் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த யுவதி ஒருவரோடு நட்பை ஏற்படுத்திய இந்தத் தம்பதியினர்,
தமது மோட்டார் சைக்கிளில் அந்த யுவதியை ஏற்றிக் கொண்டு ஹால்தண்டுவன பிரதேசத்தின் உள் வீதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளனர். பின்ளர் அங்கு வைத்து அந்த யுவதியை அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த 97,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் குழுவினர் லுணுவில சிரிகம்பள பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்துள்ள இளம் தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிளை
நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போது சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்றபோது பலத்த முயற்சியின் பின்னர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதியிடமிருந்து தங்கச் சங்கிலி மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டதாகவும் சிலாபம், மாராவில தல்வில ஆகிய பிரதேசங்களிலிருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தொலைக் காட்சி பெட்டி போன்றவற்றை தாங்கள் திருடியதாகவும்
அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இரண்டு ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள்கள் சந்தேக நபர்களின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் வங்கியில் அடகு வைத்திருந்த 96,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி, இரண்டு காதணிகள் மற்றும் பெண்டன் ஆகியனவற்றையும்
கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் கைக்குழந்தையுடன் இந்த இளம் தம்பதி பயணித்து திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளதோடு,
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இளம் தம்பதியை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.