காதலுக்கு இணங்கவில்லை..! இளம்பெண் மீதும் பெண்ணின் தந்தை மீதும் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் தற்கொலை..!
காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்திய நபர் பெண்ணின் தந்தை மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் இன்று அதிகாலை ஒளிந்திருந்து சந்தேக நபர் ஒருவர் குறித்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தேத்தாத்தீவு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆடைகள் தைக்கும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய கத்திக்குத்துக்கு இலக்கான விவாகரத்துப்பெற்ற நிலையில் 5 வயது பிள்ளை ஒன்றிற்கு தாயான 29 வயதான பெண்ணிற்கும்
அதே நிறுவனத்தில் தேத்தாத்தீவு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தருக்கும் இடையே காதல் தொடர்பு ஏற்பட்ட நிலையில் குறித்த காதலுக்கு பெண் தரப்பில் இரந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் இன்று காரைதீவு பகுதிக்கு அதிகாலை சென்ற குறித்த குடும்பஸ்தர் ஒளிந்திருந்து காதலித்த பெண் மற்றும் பெண்ணின் தந்தையையும் கத்தியால் குத்தி படுகாயமடைய செய்த பின்னர் தப்பி சென்று தனது வீடு அமைந்துள்ள தேத்தாத்தீவு பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் பெண் மற்றும் அவரது தந்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தரின் சடலம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் திருமணம் செய்த
நிலையில் 12 வயதில் பிள்ளை ஒனற்றிற்கு தந்தையானவர் என்பதை மறைத்து காதலித்ததுடன் திருமண ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக தயாரான நிலையில் பெண்ணின் தந்தையினால் திருமணம் செய்த நபர் என கண்டுபிடிக்கப்பட்டடார்.
இதனால் உண்மை நிலையை அறிந்த காதலித்த பெண் உரிய விவாகரத்தை பெற்ற பின்னர் திருமணம் பற்றி பேசமுடியும் என குடும்பஸ்தரிடம் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த அக்குடும்பஸ்தர் பெண் மற்றும் அவரது தந்தையை குத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸ் அவசர இலக்கமான 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.