ரத்மலானையில் இருந்து தென்னிந்தியா, மாலைதீவுக்கு விமான சேவை!
மாலைதீவு மற்றும் தென்னிந்தியாவிற்கு ரத்மலானை விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமான சேவைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சர்வதேச விமான நிறுவனங்களுடன் இதுகுறித்து கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு சிவில் மற்றும் வணிக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், மாலைத்தீவு மற்றும் தென்னிந்திய இடங்களுக்கு விமானங்களைத் தொடங்குவதற்கும், பிராந்திய விமான நடவடிக்கைகளுக்கான கோரிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கும், ரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் உந்துதலின் ஒரு பகுதியாக அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானம் ஒரு வருட காலத்திற்கு தரையிறக்குவதற்கும் நிறுத்துவதற்கும் முற்றிலும் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பும் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ரத்மலானை விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச விமானங்களுக்கு சலுகை எரிபொருள் வழங்குவதற்கும், விமான நிலைய வரியின் 50 சதவீதத்தை ஒரு வருட காலத்திற்கு விலக்கு அளிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.