வட்டுவாகல் பாலத்தில் பறந்த செங்கொடி! - தொடரும் மர்மம்

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தில் சுமார் 22 அடி உயரமான கம்பம் ஒன்றில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்றுக் காலையில் பறக்க விடப்பட்டு மாலையில் அகற்றப்பட்டுள்ளது. 200 மீற்றர் நீளமுடைய வட்டுவாகல் பாலம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. ஒரு வழி பாதையாக உள்ள இந்த பிரதான வீதி,பாலத்தில் பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாலத்தின் நடுவே 22 அடி உயரத்தில் சிவப்பு வர்ண கொடி ஒன்று நேற்றுக் காலை பறக்க விடப்பட்டிருந்த போது, இது பாதுகாப்பு எச்சரிக்கையாக இருக்கும் என கருதியிருந்த மக்கள் மாலையில் அகற்றப்பட்டதும் குழப்பமடைந்தனர். அந்தக் கொடியை அருகிலுள்ள இராணுவத்தினரே நாட்டியதாகவும் மாலையில் அவர்கள் கழற்றிச் சென்றதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். எதற்காக செங்கொடி நாட்டப்பட்டது என மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.