72 மணித்தியாலங்களில் 89 கொரோனா தொற்றாளர்கள்..! வெளிநாட்டிலிருந்து வருவோரால் தொடரும் ஆபத்து..
கடந்த 72 மணித்தியாலங்களில் நாட்டில் 89 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கூறியிருப்பதுடன், நேற்றய தினம் 9 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப் படுத்தப்பட்டிருப்போரில் மேலும் 4 பேருக்க்கும், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்களில் மேலும் 2 பேருக்கும்,
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3092 இல் இருந்து 3101 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஓகஸ்ட்-31ம் திகதி 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,
நேற்று முன்தினம் 43 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து கடந்த 72 மணித்தியாலங்களில் மட்டும் 89 புதிய தொற்றாளர்கள்
இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 4 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை
2883 ஆக உயர்வடைந்துள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 206 ஆக உள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.