போராட்டக்கார்களை தாக்கிய டிரம்ப் ஆதரவாளர்கள்!! -துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலி-
அமெரிக்காவில் நடந்த போராட்டத்தில் டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் இடையில் கடுமையாக மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் வன்முறை வெடித்துள்ளது.
இந்த வன்முறையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தவரை பொலிஸார் கழுத்து நெரித்து கொலை செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற தொணிப்பொருளில் அந்நாடு முழுவம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் போர்ட்லேண்ட் நகரில் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்ட ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினர் அங்குள்ள போலீஸ் சங்கம் கட்டிடத்திற்கு தீ வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போர்ட்லேண்ட் நகரை போலீசார் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்தை கலவரமாக பிரகடனப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து போர்ட்லேண்ட் நகரம் முழுவதும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். அதே சமயம் போராட்டக்காரர்களும் போலீசார் மீது கற்கள் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் டிரம்பின் ஆதரவாளர்கள் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ அமைப்பினரின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்ட்லேண்ட் நகரில் பேரணி நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், டிரம்பின் ஆதரவாக இருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பாட்டில்கள், கற்கள் மற்றும் மிளகு பொடி உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் போர்ட்லேண்ட் நகரம் முழுவதும் கலவர பூமியானது.
இதனிடையே டிரம்பின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் மோதிக்கொண்ட இடத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. 3 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
துப்பாக்கி சூடு நடத்தியது யார்? உயிரிழந்த நபர் டிரம்பின் ஆதரவாளரா? அல்லது போராட்டக் குழுவைச் சேர்ந்தவரா? என்பன உள்ளிட்ட எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. அதேசமயம் கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.