வடக்கில் மீண்டும் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்கள்!

வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களுக்கென மீண்டும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமன்றி பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறை என்றுகூறி மாணவ ஒழுக்கங்களை மீறும் வகையிலும் இராணுவத்தினர் முடிவெட்டுகின்றனர்.
இவ்வாறு தமது முகாம்களுக்குள் பொதுமக்களை அழைத்து முடிவெட்டுவது எமக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பாதிப்பு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வடக்கு மாகாண அழகக சங்கங்க ளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வடக்கில் முன்னர் பல இடங்களில் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டன. இராணுவத்தினர் அவ்வாறு செயற்படுவதால் எமக்கு உரிய வருமானம் இல்லை, அனைவருக்குமான சங்கத்தின் விதிமுறைகள் மீறப்படுகின்றன. எனவே இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலை யங்களை நடத்தக்கூடாது.
அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என சம்மேளனத்தினர் கடந்த நவம்பர் 30ஆம் திகதி வடக்கு மாகாணசபை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுடனான கலந்துரையாடலில் கோரினர். அதனையடுத்து இராணுவத்தினர் குறித்த சிகை அலங்கரிப்பு நிலையங்களை இயக்கவில்லை.
தற்போது மீண்டும் வடமராட்சி, கிளிநொச்சி, பம்பைமடு ( வவுனியா) போன்ற பிரதேசங்களில் மீண்டும் எமது சிகை அலங்காரத் தொழிலைப் பாதிக்கும் நோக்குடன் இராணுவத்தினர் தொழில் புரிகின்றனர். அதனை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி தலைமையகத்தில் சம்மேளனத்தின் ஐந்து மாவட்டச் சங்கத்தினரும்கூடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சு அறிவித்ததற்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றவகையிலேயே மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட வேண்டும் என சம்மேளனம் மாவட்ட சங்கங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. இராணுவ முகாமில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதால் பாடசாலை மாணவர்கள் விடயத்தில் எமது சம்மேளனம் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இராணுவ முகாமில் பொது மக்களுக்கான சிகை அலங்காரத்தை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சிகை அலங்கரிப்பு நிலையத்தில் சுகாதாரத்தைப் பேணுமுகமாக தொழில் புரிவோர் கட்டைக்காற்சட்டையுடன் (யம்பர்) தொழில் புரிதல், புகைத்தல், வெற்றிலை போடுதல், மது அருந்துதல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன. மீறுவோர் மீது சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதிய சிகை அலங்கார நிலையம் அமைக்கும்போது மாவட்டச் சங்கங்களின் விதிமுறையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பிரதேச சபை, சுகாதாரத்திணைக்களம், மாவட்டச்சங்கங்களின் அனுமதியுடன் அனுமதி ரத்துச்செய்யப்படும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
வடக்கு மாகாண அழகு நிலையங்களை பார்வையிடுவதற்கு கண்காணிப்பு குழுவினருக்கான அடையாள அட்டையும் அன்று வழங்கப்பட்டது என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டது.