தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட சிறுமி..! சிவில் பாதுகாப்பு படை அதிகாரியின் சமயோசிதத்தால் சிக்கினார், குழந்தை மீட்பு..
தாயாருடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திய நபரை சமயோசிதமாக மடக்கிய சிவில் பாதுகாப்பு படை அதிகாரி சிறுமியை மீட்டதுடன், கடத்திச் சென்றவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த சம்பவம் இங்கினியாகல பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. தாயாருடன் படுத்துறங்கிய சிறுமி ஒருவர் காணாமல்போன நிலையில் தாயார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிக்கு
தொலைபேசியில் விடயத்தை கூறியதுடன், அவதானமாக பாதுகாப்பு கடமையை செய்யுமாறு கூறியுள்ளார். இதற்போது தற்செயலாக குழந்தை ஒன்று அழுவதை குறித்த சிவில் பாதுகாப்பு படை அதிகாரி அவதானித்துள்ளார்.
இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட குறித்த அதிகாரி சத்தம் வந்த திசைநோக்கி சென்றபோது அங்கே குழந்தையை துாக்கிக் கொண்டு நபர் ஒருவர் நின்றுள்ளார். அதிகாரியை கண்டதும் வீதியால் சிறுமி சென்றதாகவும் அவரை பாதுகாப்பாக தான் மீட்டுள்ளதாகவும் கடத்தல்காரன் கூறியுள்ளான்.
அவனுடன் சாதகமாக பேசிய அதிகாரி தனது மோட்டார் சைக்கிளில் குழந்தையையும் கடத்தல்காரனையும் ஏற்றிக் கொண்டு சென்றதுடன் பொலிஸாரை இடையில் வரவழைத்து கடத்தல்காரனை பிடித்துக் கொடுத்ததுடன் சிறுமியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சிறுமியை கடத்திய நபர் சிறுமியின் உறவினர் என தொிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தெடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.