உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்றவுடன் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி..! சுகாதார அமைச்சருக்கு ரஷ்யா உத்தரவாதம்..
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி. மேட்டேரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும் உலக சுகாதார அமைப்பிலிருந்து தேவையான பரிந்துரைகளையும் ஒப்புதலையும் பெற்ற பின்னர் இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இடையே
நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இலங்கையினால் வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது என்று தூதுவர் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் வைத்தியசாலைகளில் வசதிகளை ஏற்படுத்த உதவித்தொகை வழங்குவதில் ரஷ்ய அரசாங்கம் ஆற்றிய மகத்தான சேவைக்கு அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ரஷ்ய அரசுக்கு நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பின் விளைவாக,
இலங்கை மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்களுக்கு மேலும் கல்வி கற்பதற்கான உதவித்தொகை திட்டத்தை ரஷ்யா விரைவில் தொடங்கும் என ரஷ்ய தூதுவர் யூரி பி. மேட்டேரி இதன்போது குறிப்பிட்டார்.