SuperTopAds

தாயை நினைவு கூர்ந்து முதல் பிரச்சாரம்!! -அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்-

ஆசிரியர் - Editor III
தாயை நினைவு கூர்ந்து முதல் பிரச்சாரம்!! -அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்-

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்து பேசினார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார். 

வில்மிங்டன் நகரில் பிரசார நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில் தனது தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்து பேசினார். 

அவர் கூறியதாவது:- உலகின் எதிரெதிர் பகுதிகளை சேர்ந்த என் தந்தையும், தாயும் உலகத்தரமான கல்வியைத் தேடி அமெரிக்கா வந்தது உங்களுக்கு தெரியும். 

1960 ஆம் ஆண்டில் நடந்த சிவில் உரிமை போராட்ட இயக்கமே அவர்களை ஒன்றிணைத்தது. குறிப்பாக மாணவ பருவத்திலேயே ஓக்லாந்து தெருக்களில் பேரணி, நீதிக்கான ஆர்ப்பாட்டம் என அவர்கள் போராடினர்.

பிற்காலத்தில் அந்த போராட்டங்களில் நானும் பங்கேற்று இருக்கிறேன். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு என்னையும் பெற்றோர் அழைத்து வருவார்கள். என்னை பெட்டியில் இறுக்கமாக கட்டி இழுத்து வருவார்கள். அந்த போராட்டங்கள் இன்றும் தொடர்கிறது.

என் வாழ்க்கையில் என் அம்மா சியாமளாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் என்னையும், சகோதரி மாயாவையும் எப்படி வளர்த்தாரென்றால், நாங்களும், ஒவ்வொரு அமெரிக்க தலைமுறையும் பேரணியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் வளர்த்திருக்கிறார்.

பிரச்சினை வரும்போது உட்கார்ந்து அதைப்பற்றி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது, மாறாக அதில் இருந்து மீண்டு வர ஏதாவது செய்ய வேண்டும் என்றே எனது அம்மா அடிக்கடி கூறுவார். 

ஆகவே நான் கொஞ்சம் செய்திருக்கிறேன். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் செதுக்கிய சொற்களை உண்மையானதாக மாற்ற, சட்டத்தின் கீழ் சம நீதி கிடைக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன்.

மாவட்ட வக்கீலாக நான் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்களில், உதவிக்காக தேவைப்பட்டவர்களுக்காக போராடி வருகிறேன். கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றியபோது, ஆயுதங்கள், மனிதர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பன்னாட்டு குற்றவியல் அமைப்புகளில் நிறுத்தினேன் என்றார்.