ஒதுக்கீடு குறைந்து செல்கின்றது: முதலமைச்சர் கவலை!

ஆசிரியர் - Admin
ஒதுக்கீடு குறைந்து செல்கின்றது: முதலமைச்சர் கவலை!

போர் முடிந்த சூழலில் பணங்கள் இப்பொழுதும் கிடைக்கப் பெறுகின்றன. காலஞ் செல்லச்செல்ல நிதிகளின் தொகைகள் குறைந்து விடுவன. அதை மனதில் வைத்துச் செயலாற்றுங்;களென முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1945 ம் ஆண்டளவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட பிரதேச வைத்தியசாலை வடமாகாணத்தின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் சுமார் 27 மில்லியன் ரூபா செலவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய முதலமைச்சர் யாழ் மக்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை எமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ள போதும் வேறு அரசாங்க வைத்தியசாலைகள் குறைவாகக் காணப்படுவதால் பல்லாயிரக்கணக்கான நோயாளர்கள் தினமும் யாழ் போதனா வைத்தியசாலையை நோக்கிச்செல்லவேண்டியுள்ளது. பாரிய நோய்த்தாக்கங்களுக்கு உள்ளானவர்களைப் போதனா வைத்தியசாலை கவனித்துக்கொள்ள ஏனையவர்கள் இவ்வாறான சிறிய வைத்தியசாலைகளுக்கு செல்வதன் மூலம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடிகள் குறைக்கப்படுகின்றன. நோயாளர்களும் இங்கு இலகுவில் நோய்ப்பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றை நிறைவு செய்து கொண்டு மருந்துகளைப்பெற்று வீடு திரும்பமுடியும்.

குருநகர் கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வைத்திய நிலையம் வெளிநோயாளர் பிரிவு, பற்சிகிச்சை நிலையம்,மகப்பேற்று விடுதி,மருந்தகம்,நிர்வாகப்பிரிவு, களஞ்சியப்பிரிவு என பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களை கவனிப்பதற்காக இரண்டு நிரந்தர வைத்தியர்கள் உட்பட 15ற்கு மேற்பட்ட அனைத்துத்தர உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டது. இது ஒரு ஆரோக்கியமான விடயம்.

நேற்றைய தினம்புளியங்குளம் பகுதியில் இதே போன்று, ஆனால்புகுயுவுஆ திட்டத்தின் கீழ், புனரமைப்புச் செய்யப்பட்ட வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காகச் சென்றிருந்தேன். அங்கு ஒரேயொரு வைத்தியர் மட்டும் முழுக்கடமைகளையும் ஆற்றவேண்டிய கட்டாய தேவை அவதானிக்கப்பட்டது. ஒரு சிங்களப் பெண் வைத்தியர் சென்ற நான்கு வருடங்களாக அங்கு தொடர்ந்து தன்னந்தனியராய் சேவையாற்றுகின்றார். ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ பீடங்களிலிருந்து வைத்திய கலாநிதிகளாக வெளிவந்து கொண்டிருக்கின்ற போதும் இன்னும் வைத்தியர்களின் பற்றாக்குறை வட மாகாணத்தில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

மக்கள் நகரத்தை அண்டியுள்ள பகுதிகளில் குடியேறி வசிக்க விரும்புவதால் நகரப்புறத்தை அண்டிய பகுதிகள் சன நெருக்கம் கூடிய பகுதிகளாக உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதிகளில் நோய்த்தாக்கங்கள் குறிப்பாக தொற்றுநோய்த்தாக்கங்கள் விரைவாக பரவுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். எனவே இப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது வீடுகளைச், சூழவுள்ள பகுதிகளைத் துப்பரவாகவும் சுகாதாரம் மிக்கதாகவும் பேணுவதுஅவசியம்.எமது யாழ் மாநகரப்பகுதியைச் சுத்தமாக்கி ஒரு சுத்தமான யாழ்ப்பாண நகரமாக மாற்றுவதற்கு யாழ்மாநகர சபை, பொது அமைப்புக்கள், படைத்தரப்புக்கள் மற்றும் இன்னோரன்ன தன்னார்வலர்களின் பங்களிப்புக்கள் நல்கப்படுகின்ற போதும் எதிர்பார்த்த முன்னேற்றம் இதுவரை அவதானிக்கப்படவில்லை.

  அண்மையில்க் கூட கடற்கரைப்பகுதிகளில் சேர்க்கப்பட்ட குப்பைகளை குப்பை லொறிகள் மூலமாகவும், கனரக வாகனங்கள் மூலமாகவும் அகற்றுகின்ற ஒரு பரீட்சார்த்த நிகழ்வில் நான் கலந்துகொண்டு அதனைத்தொடக்கி வைத்தேன். எனினும் குப்பைகளின் அளவு குறைவதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது வீடு தனது சூழல் ஆகியவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணப் பழகிக் கொண்டால் நாடே சுத்தமாகும். அதற்காக எமது வீட்டுக் குப்பைகளையும் மற்றும் கழிவுப் பொருட்களையும் அடுத்தவர் வீட்டு வாயிலில் போட்டுவிடுவது என்று அர்த்தமாகாது. மாறாக உக்காதவற்றைத் தவிர எமது வீட்டுக் குப்பை கூளங்களை மரத்திற்கடியில் தாழ்ப்பதன் மூலமும் அல்லது வீட்டு முற்றத்தில் காணப்படுகின்ற சிறிய இடமாக இருந்தால் கூட அதில் குப்பைகளைத் தாட்டு அதற்கு மேல் வீட்டுத்தோட்டங்களை உருவாக்குவதன் மூலமும் குப்பை கூளங்களும் அகற்றப்படுவன வீட்டுக்குத் தேவையான மரக்கறி வகைகளும் கிடைக்கப் பெறுவன.

அதே போன்று அரச மருத்துவ மனைகள், அரச கட்டிடங்கள்,அரசாங்கத்திற்குச் சொந்தமான வேலைத்தளங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்ற கட்டடங்கள் தளபாடங்கள் மற்றும் இன்னோரன்ன சாதனங்கள் ஆகியன மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இன்று இந்தக் கட்டடம் 27மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதென்றால் இந்தப் பணம் எமது மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணத்தில் இருந்தே இத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இக் கட்டடம் அமைக்கப்பட்ட பணம் எமது பணம் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். அதே போன்று இக் கட்டடத்தை முறையாக நாம் பயன்படுத்தாவிட்டால் மீண்டும் ஒரு முறை இதனைப் புனரமைப்பு செய்வதற்கு இன்னும் பல பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். காத்திருந்தும் காசு கிடைக்குமோ தெரியாது.போர் முடிந்த சூழலில் பணங்கள் இப்பொழுதும் கிடைக்கப் பெறுகின்றன. காலஞ் செல்லச்செல்ல நிதிகளின் தொகைகள் குறைந்து விடுவன.

இந்த மருத்துவ நிலையம் உங்களுக்கு சேவை செய்வதற்காக உங்கள் பணத்தில் இருந்து அமைக்கப்பட்டஒரு நிலையம் என்பதை மனத்தில் இருத்தி இதனை ஒழுங்காகவும்,துப்பரவானதாகவும் வைத்திருக்க அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் பங்களிப்பை நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இந்த மருத்துவ நிலையத்தின் சேவைகள் இப் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பாக கிடைக்கப் பெறும் என எண்ணுகின்றேன். மனித சமூகம் அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில் நோய்க் கிருமிகளும் தம் பங்கிற்கு மேலும் மேலும் வளர்ச்சியுற்று எம் மக்களைப்பல்வேறு புதிய புதிய விதமான நோய்களுடாகஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்களின் தாக்கங்கள் பற்றியும் அவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாத்துக் கொள்கின்ற வழிமுறைகள் பற்றியும் மருத்துவ அதிகாரிகளும் மருத்து ஆய்வு நிறுவனங்களும் ஆய்வுகளை நடாத்திய வண்ணமே உள்ளனர்.

எந்த அளவுக்கு அவர்கள் முயற்சிகள் பலனளித்துள்ளன என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நுளம்புத் தொல்லையை நீக்குவதற்காக வீடுகளில் டிடிரி பவுடரைத்தெளித்தார்கள்.அக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஓலைக் குடிசைகளாகவே காணப்பட்டன. 

இந்த மருந்து வீட்டின் உட்புறம், வெளிப்புறம், கூரைகள் என ஒரு இடம் தப்பாது அனைத்து இடங்களிலும் விசிறப்பட்டது. அன்று மாலையில் பார்த்தால் நுளம்புகளுடன் சேர்ந்து பல்லிகள், கரப்பொத்தான்,இன்னும் பல உயிரினங்கள் இறந்து கிடந்தன.ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 7நாட்களை மட்டுமே தமது வாழ்க்கைக் காலமாகக் கொண்டுள்ள நுளம்புகள்இந்த மருந்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக் கொள்வதற்கு இசைவாக்கம் அடைந்துவிட்டன.

அடுத்தபடியாக மலத்தியோன் மருந்தை விசிறினார்கள். ஆனால் அந்த மருந்துகளின் தாக்கங்கள் உணவுகளுடன் சேர்ந்துகொண்டு மக்களின் உடலை நஞ்சாக்குவது தொடர்பில் ஆய்வறிக்கைகள் வெளிவரத் தொடங்கியதும் மலத்தியோன் மருந்து விசிறும் செயற்பாடும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இப்போது பெருகிய நுளம்புகளை அழிப்பதற்குப் பதிலாக நுளம்புப் பெருக்கமே ஏற்படாதவாறு “வருமுன் காப்போம்”என்ற செயற்பாட்டின் கீழ்வீடுகளையும் வீட்டு சுற்றுப் புறங்களையும்,தாழ்வாரம்,குளிர்சாதனப் பெட்டிகளின் கீழ், சலவை இயந்திரம் என பட்டிதொட்டி எங்கும் ஆராய்ந்து நுளம்புக் குடம்பிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் மட்டும் நின்றுவிடாது தினமும் நீரை அள்ளுகின்ற கிணறுகளில் இருந்து கூட நுளம்புக் குடம்பிகள் உற்பத்தியாகாமல் தடுக்கும் பொருட்டு கிணறுகளுக்கு மேல் வலைகளை இட்டு மூடுதல், கிணற்றுக்குள் மீன் குஞ்சுகளை விட்டு நுளம்புக் குடம்பிகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று நுளம்புகளினால் பெருக்கப்படுகின்ற டெங்கு நோய்த் தாக்கம் எம் நாட்டில் கூடுதலாகக்காணப்படுகின்றது. சில காலங்களுக்கு முன்னர் மலேரியா தொற்று மிக அதிகமாக காணப்பட்டது. யானைக்கால் நோயும் காணப்பட்டது. ஆனால் சுகாதார திணைக்களத்தின் கடுமையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் பின்னர் மலேரியாத் தொற்று மற்றும் யானைக்கால்த் தொற்று ஆகியனபூச்சிய நிலைமைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் அங்கொன்று இங்கொன்றாக மலேரியாத் தாக்கம் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவை பற்றி ஆராய்ந்ததில் இந் நோய்த் தொற்றுகளுக்கான நோய்க் காவிகளாக இந்தியப் பயணத்தை முடித்துவிட்டுநாடு திரும்புபவர்களே அமைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு தான் மேலைத் தேயத்தவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கின்ற அனைவரும் நோய்த் தடுப்பு ஊசி மருந்துகள் ஏற்றியிருக்க வேண்டும் என்றும் அதற்கும் மேலாக நோய்க் கிருமிகளை கொண்டு செல்லக் கூடிய உணவு வகைகள், தாவரங்கள்,தானியங்கள் ஆகியவற்றை நாட்டிற்குள் கொண்டு செல்வதற்குத்தடையும் விதித்துள்ளார்கள்.எனவே இங்கும்மேலை நாடுகளுக்கு ஒப்பான சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக்கடுமையான சட்டங்களை மத்திய அரசு எதிர்காலத்தில் இயற்ற வேண்டியிருக்கும்.

முறையான மருத்துவக் கவனிப்புகள் இன்றி பல இன்னுயிர்கள் இழக்கப்படுகின்ற நிலைமைகளைக்கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமாயின் “வருமுன் காப்போம்”என்ற தொனிப் பொருளில் நாம் அனைவரும் இணைந்துகொண்டு சுகாதாரமாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.இன்று திறக்கப்பட்டிருக்கும்இந்த மருத்துவ நிலையம் இப் பகுதி மக்களுக்கான ஆரோக்கிய சூழலை உறுதி செய்வதற்கு தொடர்ந்து பாடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு